முஸ்லிம்களை அரசியல் அனாதையாக்கும் முன்னெடுப்பே றிசாட் மீதான கொலை முயற்சி

-ஷிபான் BM மருதமுனை.

2000 மாம் ஆண்டுகளுக்குப் பின்னரான பின்னரான முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வெறும் வெற்று வேஷங்களுக்கு கோஷமிட்டதாகவே தொடர்ந்தது. 

இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி எனக்காட்டிக்கொண்ட மு.கா  தலைமை சலுகைகளுக்கு விலைபோன வரலாறுகள் சகிக்க முடியாமை கண்டு கட்சியின் அடுத்தகட்ட இளம் தலைவர்களின் வெளியேற்றமும் இக்காலப்பகுதியிலேயே  நடந்தது.

மறுபுறம் பெரும்பான்மை சிங்கள, தமிழ் சமூகங்கள் பெரும் தலைவர் அஷ்ரபிடம் சூடுண்டு, கற்றுக்கொண்ட பாடம் என்பவற்றினால், ஹக்கீமுடன் நட்பு பாராட்டிக்கொண்டு, முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் ஒரு தலைமைத்துவம் உருவாகிவிடக்கூடாது என்பதில் கறாராகவே இருந்து வந்திருக்கின்றது.

இவற்றுக்கு நடுவே இன்று இலங்கை அரசியலில் அகலக்காலூன்றி முஸ்லிம்கள் வியாபித்திருக்கின்ற மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது குறுகியகால வளர்ச்சியினாலும், அரசியல் முதிர்ச்சியினாலும் தலைமைத்துவ ஆற்றல்களால் தன்னை ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்குமான தலைவராக  அடையாளப்படுத்தியவர் றிசாட் பதியுதீன்.

மாத்திரமன்றி 1987 களில் இரவோடு இரவாக இணைத்துவிட்ட வடகிழக்கினை மீண்டும் இணைப்பதற்கு ஆரம்பம் முதலே சிவப்பு விளக்கு போட்டவர்  றிசாட் பதியுதீன். தமிழ் டயஸ்போராக்களின் ஈழச்செயற்பாடுகளின் மொத்த முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக வட புலத்தில் இருந்து இயங்கும் ஓர் முஸ்லிம் தலைமைத்துவம் இருப்பதானது அரசியல் ரீதியாக பாரிய இழப்பாகவே அவர்களால் நோக்கப்படுகிறது.

முஸ்லிம்  சமூகத்தின் விடிவு கருதி, எந்த வகையான விட்டுக்கொடுப்புகளோடும் பயணிக்க தயாரன தலைமைத்துவம் என்பதனை உணர்த்தி, கடந்த பிரதேச சபை தேர்தலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசனலி அவர்களோடு கிழக்கிலே, முஸ்லிம் கூட்டமைப்பினை நிறுவி அதற்கான தலைமைத்துவ விட்டுக்கொடுப்பும் செய்தவர் றிசாட் பதியுதீன்.

இன்நிலை தொடர்ச்சியாக பின்பற்றப்படுமானால், இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் நிலைத்துவிடப் போகின்ற, தவிர்க்க முடியா அரசியல் சக்தியாக ஆளுமை றிசாட் வளர்ந்துவிடக் கூடாது; என்பதில் தேசியத்தில் மட்டுமலாது, சர்வதேசத்திலும் இடம் பெறும் சதிதான் அவர் மீதான கொலை முயற்சிக்கான உந்துகோலாக இருத்தல் வேண்டும்.

அன்று எவ்வாறு எழுச்சி பெறவிருந்த முஸ்லிம்களின் ஏகோபித்த குரல் அரநாயக்கா மலைமுகட்டில் வைத்து கருக்கப்பட்டு  இந்த சமூகம் இரு தசாப்தங்கள் அனாதையாக்கப்பட்டதோ! 

அதையொத்த முயற்சியாகவே, மீண்டும் தளைத்தோங்கும் முஸ்லிம்களின் ஏகபோக உரிமைக்குரல் றிசாட் பதியுதீனின் குரல்வளையை நசிக்கி இன்னும் பல தசாப்தங்கள் முஸ்லிம் சமூகத்தினை குரலற்று அகதிகளாக்கும் முயற்சியாகவே இதனை நோக்க வேண்டும். 

எல்லாம்வல்ல  அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன். அந்த வல்ல நாயனே எம்மை காத்தருள வேண்டும்!
முஸ்லிம்களை அரசியல் அனாதையாக்கும் முன்னெடுப்பே றிசாட் மீதான கொலை முயற்சி முஸ்லிம்களை அரசியல் அனாதையாக்கும் முன்னெடுப்பே றிசாட் மீதான கொலை முயற்சி Reviewed by Vanni Express News on 10/27/2018 04:37:00 PM Rating: 5