உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் பைஸர் முஸ்தபா

-மினுவாங்கொடை நிருபர்

நாடளாவிய ரீதியில் இயங்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு, தற்போது உள்ளதை விடவும் அதி கூடுதலான அதிகாரங்களை வழங்க மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன்மூலம், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு, தங்களது கிராமங்களிலேயே அவர்களுக்குத் தேவையான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் இலங்கை மன்றத்தினால் நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திகள் குறித்த உயர் டிப்ளோமா பாடநெறிகளைப் பூர்த்தி செய்த உள்ளூராட்சி மன்றப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்வு, அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில், கொழும்பு - பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 2018 ஆம் ஆண்டு, குறித்த பாடநெறிகளைப் பூர்த்தி செய்த 87 பேருக்கான சான்றிதழ்களையும், அமைச்சர் பைஸர் முஸ்தபா இதன்போது வழங்கி வைத்தார்.

 இச்சிறப்பு நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,  உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும்போது, எமக்கு பல பாரிய  சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.  தங்களது நிறைவேற்று அதிகாரங்களை நேரடியாகவே  பயன்படுத்தும் அரசியல்வாதிகளுடன் கடமையாற்றுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளமையே, இந்த சவால்களுக்கு பிரதான காரணமாகும். 

   உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான  இலங்கை மன்றம் கடந்துபோன மூன்று ஆண்டு காலத்திற்குள், அதி சிறந்த  மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தி, அதன்மூலம் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு, சேவையாற்றுவதற்கு வாய்ப்பளித்துள்ளது. அத்தோடு, பணியாளர்களின் அறிவுத் திறமைகளையும்  மேலும் மேம்படுத்தி, உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை, மிகக் கச்சிதமாகக் கட்டியெழுப்பியுள்ளது. எனவே, உள்ளூராட்சி மன்றம் தொடர்பாக கற்கை நெறியொன்றை, வெகு விரைவில் ஆரம்பிப்பதற்கும், பல்கலைக் கழகங்களுடன் கலந்துரையாடவுள்ளேன்.

பொதுமக்கள், அவர்களின்  பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் ஒரு சிறந்த நிறுவனங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் திகழ்கின்றன. இவ்வாறான நிறுவனங்களை மேலும் மேம்படுத்தி பலமுள்ளதாக ஆக்காமல் இருந்தால், எமது நாட்டிற்கு சிறந்ததொரு  எதிர்காலம் இருக்காது. ஆகவேதான், முறையான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மென்மேலும் அதிகரிக்கப்பட்டு பலப்படுத்தப்படல் வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மிகச் சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் பைஸர் முஸ்தபா Reviewed by Vanni Express News on 10/23/2018 04:25:00 PM Rating: 5