மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யத் தவறினால் சமூகப் பொறுப்பிலிருந்து விலகிவிடுவோம்

ஐ. ஏ. காதிர் கான்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யத் தவறினால், நமக்குள்ள சமூகப் பொறுப்பிலிருந்து நாம் விலகியவர்களாகக் கருதப்படுவோம். எனவே, இவ்வுலகில் சுகதேகிகளாகப் பிறந்திருக்கும் நாம், அதனை ஒரு பாக்கியமாகக் கருத்திற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் போதியளவு உதவி ஒத்தாசைகளைப் புரிய முன்வர வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

பார்வைக் குறைபாடுடைய இலங்கை கிரிக்கெட் சங்கம் ஏற்பாட்டில், செய்தியாளர் சந்திப்பொன்று, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது, கிரிக்கெட் விளையாட்டின் மூலம் நமது தேசம் வெற்றிகொண்டுள்ளது. தனிப்பட்டவர்களும் வெற்றிகொண்டுள்ளனர். எனினும், சமுதாயத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பாரிய பொறுப்பு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு உள்ளது என்பதை சற்று அழுத்தமாக நான் எடுத்துக் கூறினேன். அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல், உலகில் உயரிய நிலையை அடைய முடியாது.

பார்வை குறைபாடுடையவர்களுக்கான கிரிக்கெட், மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் என்பன, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஓர் அங்கமாகும். இதற்கு நாம் பூரண உதவி ஒத்தாசைகளை வழங்க வேண்டும். எனவே, நாம் பார்வை குறைபாடுடைய கிரிக்கெட் வீரர்களைக் கெளரவிக்க வேண்டும். இவர்களுக்கு நாம் உதவி செய்ய முடியாவிட்டால், சமூகப் பொறுப்பிலிருந்து விலகியவர்களாகக் கருதப்படுவோம்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் செலவிட்டு வந்துள்ள நிதித்தொகையைப் பார்க்கும்போது, பார்வை குறைபாடுடைய கிரிக்கெட் அணியினருக்கு உதவுவது, பெரியதொரு காரியமல்ல. எனவே, பார்வை குறைபாடுடைய இலங்கை கிரிக்கெட் சங்கத்துக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு உள்ளது என்றார்.

இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் பார்வை குறைபாடுடைய அணியினருக்கு இடையிலான மும்முனை இருபது 20 கிரிக்கெட் தொடர், ஒக்டோபர் 5 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதி நிறைவடையவுள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருபது 20 தொடரும், 40 ஓவர்கள் கிரிக்கெட் தொடரும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யத் தவறினால் சமூகப் பொறுப்பிலிருந்து விலகிவிடுவோம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யத் தவறினால் சமூகப் பொறுப்பிலிருந்து விலகிவிடுவோம் Reviewed by Vanni Express News on 10/09/2018 03:49:00 PM Rating: 5