கற்பிட்டியை உள்ளம் கவரும் சுற்றுலாத்துறை மையமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பேன்

-ஐ. ஏ. காதிர் கான் 

இலங்கை சுற்றுலாத்துறையில் மனதைக் கொள்ளை கொள்ளும் ஒரு ரம்மியமான பிரதேசமாகத் திகழும் கற்பிட்டியை, மேலும் அபிவிருத்தி செய்து, உள்ளம் கவரும் ஒரு சுற்றுலாத்துறை மையமாக முன்னெடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும், அரசாங்கம் எடுத்து வருவதாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

புத்தளம் - கற்பிட்டி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளை பொதுமக்கள் பாவனைக்காக, உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் ஏ.எம். இன்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டதாவது, கற்பிட்டி நகரை, சிறந்த ஒரு நகரமாக மாற்றியமைப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார். அழகிய, தூய்மையான, ரம்மியமான ஒரு பிரதேசமாக இப்பிரதேசத்தை மாற்றுவதே ஜனாதிபதியின் எண்ணக் கருவாகும். தற்போதைய அரசாங்கம் மற்றும் எனது அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளின் பயன்களை, பொது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் இவ்வாறான சிறந்த சந்தர்ப்பத்தை, நான் எனது பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்.

எமது மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், நவீன வசதிகளுடன் கூடியதான கற்பிட்டி வாராந்த சந்தை, பிரதான பஸ் தரிப்பு நிலையம் மற்றும் நுரைச்சோலை மக்கள் வாசிகசாலை என்பனவற்றை, மக்கள் பாவனைக்காகக் கையளிக்கின்றோம். இவை, இப்பிரதேச மக்களுக்குக் கிடைத்துள்ள பெரும் பொக்கிஷங்களாகும்.

புத்தளம் மற்றும் கற்பிட்டி மக்களுக்குள்ள பிரச்சினைகளை, நான் நன்கு அறிவேன். இதனால்தான், அரசாங்கம் என்ற வகையில், இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொண்டு, மக்களாகிய உங்கள் பாவனைக்கு விட்டுள்ளோம் என்றார்.

கற்பிட்டி பிரதேசத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமையால், இப்பிரதேசத்தை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதால், இதற்காகக் கூடுதலான நிதியை ஒதுக்குமாறு, பிரதேச சபைத் தலைவர் இன்பாஸ், அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அதற்கு அமைச்சர் "எதிர்வரும் காலங்களில் இப்பிரதேசத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக, கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்து தருகிறேன்" என வாக்குறுதி அளித்தார்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும், கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மற்றும் செயலாளருடன் அமைச்சர் இதன்போது கலந்துரையாடல்களை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
கற்பிட்டியை உள்ளம் கவரும் சுற்றுலாத்துறை மையமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பேன் கற்பிட்டியை உள்ளம் கவரும் சுற்றுலாத்துறை மையமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பேன் Reviewed by Vanni Express News on 10/09/2018 10:32:00 PM Rating: 5