யாழ், கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் மூன்றாவது (ஹி 1440- 2018/2019) திட்டமிடல் மாநாட்டுத் தீர்மானங்கள்

-எம்.எல்.லாபிர்

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் தமது சமூக ஒழுங்கமைப்பினை சீராக முன்னெடுக்கும் நோக்குடன் தமது சமூகத்தேவைகளை முதன்மை அடிப்படையில் ஆராய்ந்து அவர்களின் சமூக இலக்குகள் மற்றும் சமூகச் செயற்பாடுகள் குறித்து பின்வரும் விடயங்களை உள்ளடக்கிய ஒரு சமூகத்திட்டமிடலை 30-09-2018 (ஹிஜ்ரி 1440 முஹர்ரம் 20ம் நாள்) அன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் பேரவையில் அங்கம் வகிக்கும் பள்ளிவாயல் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாநாட்டிலே முன்மொழிகின்றார்கள்.

யாழ்ப்பாணம், கிளொநொச்சி முஸ்லிம் மக்களின் சமூக இலக்கு

“யாழ்ப்பாணம்,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள், 1990களில் தம்மீது மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து, 2002களுக்குப் பின்னரும், 2009களுக்குப் பின்னரும் ஏற்பட்டிருக்கும் புதிய சூழ்நிலையில் தம்மை தமது பூர்வீக வாழிடங்களில்  பூர்வீக மக்களாக நிலைநிறுத்த நாட்டம் கொண்டிருக்கின்றார்கள். அதனடிப்படையில் அவர்கள் தமது பூர்வீக நிலங்களில் நிரந்தரமாகக் குடியேறவும், தமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளவும், தமது சந்ததியினரை மேம்படுத்தவும், தமது சமய கலாசார விழுமியங்களைப் பேணவும், இப்பிரதேசத்தின் ஏனைய சமூகங்களோடு சகவாழ்வினை மேற்கொள்ளவும் நாட்டம் கொண்டிருக்கின்றார்கள். இதனடிப்படையில் தமக்கான சமூக, அரசியல், வாழ்வை ஒழுங்கமைப்பதே அவர்களது பிரதான சமூக இலக்காகவும் அமைந்திருக்கின்றது.

அந்த இலக்கை அடைதல் பொருட்டு 10 அம்சங்களை உள்ளடக்கிய சமூக செயற்பாட்டுத் திட்டமிடலை இவ்விடத்தில் முன்மொழிகின்றார்கள்.

செயற்திட்டம் 01: யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 4500 முஸ்லிம் குடும்பங்களுள் ஆகக் குறைந்தது 3000 முஸ்லிம் குடும்பங்களாவது மீண்டும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் மீளக்குடியேற்றப்படல்.

செயற்திட்டம் 02: மீள்குடியேறுகின்ற 3000 குடும்பங்களும் தமது சுய உழைப்பின் மூலம் சிறப்பான வாழ்வை முன்னெடுப்பதற்கு ஏற்றதான வாழ்வாதார முறைமையொன்றினை அவர்களுக்குப் பெற்றுத்தருதல்.

செயற்திட்டம் 03: மீள்குடியேறுகின்ற 3000 குடும்பங்களினதும் இளம் சந்ததியினரை அடிப்படையாகவைத்து 1990களுக்கு முன்னர் இப்பிரதேசங்களின் முஸ்லிம் மக்களை மையப்படுத்தி இயங்கிய முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தையும் மீளவும் ஆரம்பித்தலும், ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற பாடசாலைகளை சிறப்பாக கொண்டு நடாத்துவதற்கு ஒத்துழைத்தலும்.

செயற்திட்டம் 04: முஸ்லிம் மக்களின் பூர்வீக வாழிடங்கள், கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளான போக்குவரத்து, மின்சாரம், வடிகாலமைப்பு, சுகாதாரம், மையவாடிகள், குளங்கள், மீன்பிடித்துறைகள் என்பவற்றைப் பேணுவதற்கான ஒழுங்குமுறைமையினை  ஏற்படுத்துதல்.

செயற்திட்டம் 05: யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களுக்கும் அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள், தூதுவராலயங்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றுக்கிடையிலான சீரான உறவுகளைப் பேணுவதும், அவர்களினால் வெளியிடப்படுகின்ற தகவல்களை எமது மக்களுக்குக் கொண்டுசெல்வதும், அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் எமது மக்களின் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் அவர்களுக்கு முன்வைத்தலும்.

செயற்திட்டம் 06: யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் இப்பிரதேசங்களில் வாழ்கின்ற ஏனைய சமூகத்தவர்களோடு நல்லினக்கமாகவும் சகவாழ்வினைப் புரிந்தும் செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றார்கள், இதனடிப்படையில் சமூக நல்லிணக்கம் சார்ந்த செயற்பாடுகளுக்கு நாம் முக்கியத்துவமளித்தல் அவசியமாகின்றது.

செயற்திட்டம் 07: சமூக விவகாரங்கள், சமூக வழிகாட்டல்கள், மற்றும் இளைஞர் விளையாட்டு விவகாரங்களைக் கையாள்தல். குறிப்பாக போதைவஸ்துப்பாவனை, வியாபாரம், வன்முறைக்கலாசாரம் என்பவற்றுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டினையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தல்.

செயற்திட்டம் 08: பெண்கள் மேம்பாட்டு செயற்திட்டம். எமது சமூகத்தின் பெண்கள் மேம்பாட்டு செயற்திட்டமொன்று சிறப்பாக முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும், அதனூடாக பெண்கள் கல்வி, பெண்களின் தொழிற்பயிற்சி, திறன் விருத்தி, பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகளுக்கான வழிகாட்டுதல்கள், எனப் பல்வேறுவிடயங்கள் உள்ளடக்கப்படுதல் அவசியமாகும்

செயற்திட்டம் 09: அரசியலும், உரிமைசார் விவகாரங்களும். எமது சமூகத்தின் அரசியல்சார் செயற்திட்டம் எவ்வாறானதாக ஒழுங்கமைக்கப்படுதல் அவசியம் என்பதை வழிகாட்டுவதற்கும், அனைத்து அரசியல் கட்சிகளோடும் தேர்தல் நோக்கற்று இணைந்து செயற்படுவதற்கான வழிமுறைகளையும் பேணுதல், மற்றும் எமது உரிமைசார்ந்த விடயங்களையும், பொதுவான மனித உரிமைசார் விடயங்களில் கவனம் செலுத்துதலும் இப்பகுதியினூடாக செயற்படுத்தப்படும்.

செயற்திட்டம் 10: நிர்வாகமும் நிதியும். இவ்விவகாரங்களை அமுலாக்குதல் பொருட்டு 7 அங்கத்தவர்களை உள்ளடக்கிய நிறைவேற்றுக்குழுவும், 29 அங்கத்தவர்களை உள்ளடக்கிய செயற்குழுவும் இன்றைய அமர்விலே தேர்வுசெய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டனர். பேரவையின் தலைவராக ஜனாப் எம்.யூ.எம்.தாஹிர் அவர்களும், உப தலைவராக ஜனாப்.எம்.எல்.லாபிர் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். பொதுச் செயலாளராக ஜனாப்.ஏ.சி.மஹானாஸ் அவர்களும் துணைப் பொதுச் செயலாளராக ஜனாப் ஐ.எல்.நிராஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். நிர்வாகச் செயலாளராக ஜனாப் என்.எம்.அப்துல்லாஹ் அவர்களும், நிதிச் செயலாளராக ஜனாப் ஏ.ஜீ.நௌபர் அவர்களும், துணை நிதிச் செயலாளராக ஜனாப் ஏ.சி.நைஸர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். இது தவிர துரைசார்ந்த, பிரதேசங்கள் சார்ந்த இணைப்பாளர்களும் இந்நிகழ்வின்போது நியமனம் செய்யப்பட்டார்கள்.

இம்மாநாட்டின் பொதுவான தீர்மானங்களாக

v  மேற்படி சமூகத்திட்டமிடலை அங்கீகரித்தலும், செயற்குழுவை அங்கீகரித்தலும் பிரதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

v  கல்வி சார் விஷேட தீர்மானமாக யாழ் ஒஸ்மானியா கல்லூரியினை இரண்டாம் நிலைக் கல்விக்கு முக்கியத்துவம் செலுத்துகின்ற பாடசாலையாக பேணுவதற்கு ஏதுவாக  ஆரம்பப்பிரிவுக்கான இரண்டு பாடசாலைகளாக அல்-ஹம்றா ஆரம்பப் படசாலையினையும், மன்பஉல் உலூம் ஆரம்பப் பாடசாலையினையும் மீளத்திறப்பதற்கு நடவடிக்கையெடுத்தல்.

v  இலங்கையின் அனைத்து அரசியல் கைதிகள் அனைவரையும் எவ்விதமான நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று கோருவதோடு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் தமது முழுமையான ஆதரவினையும் வழங்குகின்றார்கள்.

v  புத்தளம் அறுவாக்காட்டுப் பகுதியில் கொழும்பிலிருந்து தருவிக்கப்படுகின்ற குப்பை கூலங்களை புதைப்பதற்கான செயற்பாட்டிற்கு புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்கள் தமது பூரண எதிர்ப்பினை முன்வைத்து வருகின்றார்கள், இவ்வெதிர்ப்பு நடவடிக்கைக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் தமது முழுமையான ஆதாரவினை வழங்கவேண்டும் என்று கோருவதோடு, இலங்கை அரசும் மேற்படி செயற்திட்டத்தினை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

இத்தீர்மானங்களை இம்மாநாட்டிலே யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் பொதுச் செயலாளர் ஜனாப் ஏ.சி.மஹானாஸ் அவர்களால் வாசித்து அவையோரின் அங்கீகாரம் பெறப்பட்டது.
யாழ், கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் மூன்றாவது (ஹி 1440- 2018/2019) திட்டமிடல் மாநாட்டுத் தீர்மானங்கள் யாழ், கிளிநொச்சி முஸ்லிம் பேரவையின் மூன்றாவது (ஹி 1440- 2018/2019) திட்டமிடல் மாநாட்டுத் தீர்மானங்கள் Reviewed by Vanni Express News on 10/01/2018 03:15:00 PM Rating: 5