திறந்த பல்கலைக்கழகங்கள் பல திறமையான நபர்களை சமூகத்துக்கு வழங்குகிறது - காதர் மஸ்தான்

திறந்த பல்கலைக் கழகங்கள் பல திறமையான சமூகத்துக்கு தேவையான நபர்களை தகுதியோடு வழங்கிக் கொண்டிருக்கின்றது என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியா திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தில் ஆங்கிலம்,  மற்றும் மனித வள முகாமைத்துவம் ஆகிய கற்கை நெறிகளை முடித்துக்கொண்ட 82 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில்  நேற்று கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பல்கலைக்கழக அனுமதியை பெற தவறியவர்களுக்கும்
கிராம மட்டத்தில் இருந்து பல இளைஞர் யுவதிகளை பட்டதாரிகளாகவும் கல்வித் தகமை அடிப்படையில் உயர்ந்தவர்களாகவும் ஆக்கும் மகத்தான பணியை திறந்த பல்கலைக் கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன அந்த வகையில் வவுனியா திறந்த பல்கலைக்கழகம் அந்த பணியை செவ்வனே செய்து வருகின்றது.

இங்கு இரண்டு கற்கைநெறிகளை முடித்துக் கொண்ட இளைஞர் யுவதிகள் இருக்கின்றீர்கள் நீங்கள் பூர்த்தி செய்து இவ்விரண்டு  கற்கை நெறிகளும் அத்தியாவசியமானதும் சமூகத்துக்கு தேவையானதுமான இரண்டு பகுதிகள் ஆகும்.

கிராமப்புறங்களில் இருந்து நகர் நோக்கி வேலை தேடி செல்லும் பல பல இளைஞர்கள் திறமைகள் இருந்தும் ஆங்கிலம் என்கின்ற ஒரு சிறிய பகுதிக்குள் மாட்டிக் கொள்கிறார்கள.

ஆனாலும் அவ்வாறு அந்த நேரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை ஏனெனில் இலவசமாக பல்வேறான கற்கைநெறிகள் நடத்தப்படுகின்றன அரசாங்கம் அதற்கான பாரிய தொகையினை செலவு செய்கின்றது.

எனவே கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது போல நீங்கள் இந்த கற்கை நெறியோடு மாத்திரம் நின்றுவிடாமல் இன்னும் உங்களால் ஏதேனும் மேலதிகமாக படிக்க முடிந்தால் படித்து உங்களது தகமைகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

கடந்த காலங்களில் பல தகைமையானவர்கள் இருக்க உயர்தரக் கல்வியை கூட  முடிக்காத பலருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனாலும் இந்த அரசாங்கத்தில் தகமை அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் அவ்வாறு ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெறுமாக இருந்தால் அது தொடர்பில் தைரியமாக குரல் கொடுக்கவும் முடியும்.

அதே நேரத்தில் வன்னி பிராந்தியத்துக்குள் இவ்வாறான நிலைமை காணப்படுமாக இருந்தால் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு அது தொடர்பில் விவரங்களை கூறினால் மேலதிகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதுபோல அண்மைக்காலமாக என் மீதான தவறான பிரச்சாரங்கள் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றன ஏனெனில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்ற பொழுது தயக்கமின்றி நான் குரல் கொடுப்பதே ஆகும்.

30 வருட யுத்த வடு எங்களது மனங்களை விட்டு ஆறாத நிலையில் அவர்களுக்கு அரசாங்கம் எதனை கொடுத்தாலும் சரியாக்கிவிட முடியாது என்கின்ற பொழுது அதிலும் அரசியல் செய்து தமது கட்சி சார்பானவர்களுக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்ற எல்லாவற்றையும் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவேண்டியவர்களையும் வைத்து காலாகாலமாக செய்துவரும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இது என்னால் மாத்திரம் செய்து முடிக்கக்கூடிய காரியம் அல்ல இதற்கு உங்களைப்போன்ற படித்த இளைஞர்களின் ஒத்துழைப்பு  தேவைப்படுகின்றது.

ஏனெனில் நீங்கள் வேறு உங்களது சமூகம் வேறு அல்ல இரண்டுமே ஒன்றுதான் உங்களது பிரதேசங்களில் இடம்பெறுகின்ற மோசடிகள் தொடர்பில் உங்களால் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் அவ்வாறான ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெறுமாக இருந்தால் அது தொடர்பில் அரசியலுக்கு அப்பால் நின்று குரல் கொடுக்க நான் எப்பொழுதுமே தாயாராக இருக்கின்றேன்.

மேலும் இந்த கற்கை நெறியின் ஊடாக இந்த சமூகத்துக்கு உங்களால் ஏதேனும் நன்மை பயக்கக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமாக இருந்தால் அதுவே போதுமானதாகும்.

கற்கை நெறியினை பூர்த்தி செய்து கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் என்னுடைய அன்பான நல்வாழ்த்துக்கள்.

அத்துடன் என்னை இந்த நிகழ்வு அழைத்தமைக்காக வவுனியா திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தின் தலைவர் உட்பட அதன் நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் வி.திவாஸ்கர்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விரிவுரையாளர்கள் உயரதிகாரிகள் கற்கை நெறியினை பூர்த்தி செய்த இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திறந்த பல்கலைக்கழகங்கள் பல திறமையான நபர்களை சமூகத்துக்கு வழங்குகிறது - காதர் மஸ்தான் திறந்த பல்கலைக்கழகங்கள் பல திறமையான நபர்களை சமூகத்துக்கு வழங்குகிறது - காதர் மஸ்தான் Reviewed by Vanni Express News on 10/22/2018 11:39:00 PM Rating: 5