மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் சாதனையாளர்கள் பலரை உருவாக்க முடியும் - காதர் மஸ்தான்

-ஊடகப்பிரிவு

மாணவர்கள் வெற்றி பெறுகின்ற பொழுது அவர்களை ஊக்குவிப்பதோடு  தோற்றாலும் அவர்களால் முடியும் என்ற நம்பிக்கையை நாம் ஊட்டினால் அம்மாணவர்கள் பல சாதனைகளைச் செய்வார்கள் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  தோராவில் தமிழ் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எல்லா மாணவர்களுக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கின்றது அதனை அவர்கள் சரியாக முதலில் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

ஏனெனில் நம்மால் முடியாத ஒன்றை தேடி பயணித்து கொண்டிருப்பதை விட நம்மால் முடிந்த ஒன்றில் முழுமையான முயற்சியில் ஈடுபட்டு எம்மால் வெற்றிக்கனியை பறிக்க முடியும்.

உதாரணமாக ஒருவரால் சிறந்த பெறுபேறுகளை பெருமளவிற்கு படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தாலும் ஒரு வேளை விளையாட்டின் ஊடாக இந்த பாடசாலைக்கு பெருமை சேர்த்திருப்பார்.

அதற்காக அந்த மாணவரால் எந்த பயனும் இல்லை என்று ஆசிரியர்கள் நினைத்திருந்தால் இவ்வாறானதொரு பெருமை பாடசாலைக்கு கிடைத்திருக்காது. இதற்கு பெற்றோர்களது பங்களிப்பும் முழுமையாக தேவைப்படுகின்றது.

ஏனெனில் அண்மையில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில்  சிலாபத்தை சேர்ந்த மீனவர் தொழிலாளி ஒருவருடைய மகள் நமது நாட்டுக்கு பெருமையைத் தேடித் தந்தார்.

இதற்காக அந்த மாணவியினுடைய தந்தை தன்னிடம் இருந்த நிலம் ஒன்றின் பத்திரத்தை அடகு வைத்து அந்த மாணவியை வெளிநாட்டுக்கு அனுப்பி அந்த போட்டியில் வெற்றி பெறச் செய்திருக்கிறார்.

இப்பொழுது அந்த தந்தைக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்குமே ஒரு கௌரவத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்.

இதுபோல இந்த பாடசாலையில் இருந்தும் எமது நாட்டுக்கு கௌரவம் சேர்க்கக்கூடிய உங்களது பாடசாலையின் பெயர் பலரது வாய்களில் உச்சரிக்கப்பட இங்கு இருக்கின்ற மாணவ-மாணவிகள்  எந்த துறையிலாவது சாதனை செய்ய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னைப் பற்றி இங்கு இருக்கின்ற சில மாணவர்களுக்கு தெரிந்திருக்கும் என்றாலும் நாம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது பலருக்கு தெரியாது.

என்னை பலரும் அரசியல்வாதியாகவே இப்பொழுது பார்க்கின்றார்கள். ஆனாலும் நாங்கள் அரசியலுக்கு வரும் முதலே கல்விக்காகவும் விளையாட்டுத்துறைக்காகவும் எம்மாலான அனைத்து பங்களிப்புகளையும் செய்து வந்திருக்கிறோம்.

நான் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் என்னுடைய மாதாந்த சம்பளத்தை ஏழை மாணவர்களின் கல்விக்காக வழங்கி வருகின்றேன்.

இப்பொழுது பிரதியமைச்சர் பதவி கிடைக்கப் பெற்றிருக்கிறதும் அதனூடாக கிடைக்கப்பெறும் என்னுடைய சம்பளத்தையும் நான் அவ்வாறே செலவு செய்கிறேன்.

ஏனெனில் நான் அரசியலுக்குள் பிரவேசித்தது அது என்னுடைய சட்டைப் பையை நிரப்பிக் கொள்ள அல்ல மாறாக எனது சேவையை மேலும் விஸ்தரிப்பதே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை

அத்துடன்  அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறுகின்றவற்றைக்கொண்டு தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் சரியாக கொண்டு சேர்க்கும் பணியை நான் செய்து முடிக்க வேண்டும் என்கின்ற ஒரு ஆதங்கம்.

ஏனெனில் இப்பொழுது பலரும் தமது கட்சியையும் தமது இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அதில் ஒரு பகுதியாகவே தமக்கு வாக்களிக்காத நம்மோடு இணைந்து செயற்படாத அப்பாவி ஏழை மக்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.

இது காலாகாலம் நடந்தாலும் என்னால் முடியுமான வரை இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம் பெறுகின்ற பொழுது சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன்.

இனியும் எனது பணி செவ்வனே தொடரும்.

மேலும் இந்த பாடசாலையில் எதிர் வரக்கூடிய க.பொ.த  சாதாரண தர பரீட்சை, க. பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றில் இன்று பாராட்டப்பட்ட மாணவர்களை விட நான் அடுத்த வருடம் இந்த பாடசாலைனுடைய பாராட்டு விழாவுக்கு வருகின்ற பொழுது அதிகமான மாணவர்கள் பரீட்சையில் சித்தி பெற்று நல்ல புள்ளிகளை பெற்றிருப்பதோடு விளையாட்டு துறையிலும் ஏனைய துறைகளிலும் பல சாதனைகளை செய்திருக்க வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்கின்றேன்.

அத்துடன் பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த பாடசாலைக்கு ஒரு செயற்பாடு அறையை நிர்மாணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து மிக விரைவில் உங்களுக்கான செயற்பாட்டு அறை ஒன்றை பெற்றுத் தருவேன் என தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் என்னை இந்த நிகழ்வுக்கு அழைத்தமைக்காக பாடசாலை சமூகத்துக்கும் இப்பிரதேச மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

தோராவில் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.சிவகரன் மற்றும் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் உட்பட உயரதிகாரிகள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் சாதனையாளர்கள் பலரை உருவாக்க முடியும் - காதர் மஸ்தான் மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் சாதனையாளர்கள் பலரை உருவாக்க முடியும் - காதர் மஸ்தான் Reviewed by Vanni Express News on 10/23/2018 03:50:00 PM Rating: 5