இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள்

-ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு

நாட்டின் எதிர்காலம் கல்வி கற்ற எதிர்கால தலைமுறையின் கைகளிலேயே தங்கியுள்ளதென்றும் இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு கடந்த மூன்றரை வருட காலமாக அரசாங்கம் பல்வேறு முக்கிய நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துள்ளதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு விரிவான நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதன் நன்மைகளை பெற்றுக்கொண்ட அனைவரும் சிறந்த பிரஜைகளாக தாய் நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார். 

கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கை மாணவிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (02) முற்பகல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதியை கல்லூரி மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து உள்ளக விளையாட்டரங்கை மாணவிகளிடம் கையளித்த ஜனாதிபதி, அதனை சுற்றி பார்வையிட்டார். 

விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிப்படுத்திவரும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவிகளின் விளையாட்டு பயிற்சிகளை மேலும் முறைப்படுத்தும் வகையில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக இந்த உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, எமது தாய் நாடு உலகின் பாராட்டை பெறும் விடயங்களுள் முக்கிய இடத்தை வகிப்பது இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையுமாகுமென்று தெரிவித்தார். 

கல்லூரியில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசில்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார். கல்லூரியின் நிர்வாகப் பணிகளில் 23 வருடங்கள் சேவை செய்துள்ள இரண்டு ஆசிரியைகள் ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டனர். கல்லூரியின் அதிபர் ஆர்.ஏ.எம்.ஆர். ஹேரத்தினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. 

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட அதிதிகளும், கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள் இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள் Reviewed by Vanni Express News on 10/02/2018 11:47:00 PM Rating: 5