வடக்கு கிழக்கில் டிசம்பர் 31க்கு முன்னர் காணிகளை விடுவிக்கவும் - ஜனாதிபதி

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயற்குழுவின் கூட்டம் நேற்று மூன்றாவது முறையாக இடம்பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். 

வரையறுக்கப்பட்ட காலவரையறைக்குள் குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறும், அதற்கான போக்கினை அடுத்த மாதம் நடைபெற உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயற்குழுவின் கூட்டத்தின் போது முன்னிலைப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆயுதப்படைகளின் கீழ் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு சொந்தமான இடம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பிலும் வடக்கு மற்றும் கிழக்கில் குடிநீரை பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கை தொடர்பிலும் இதன்போது விஷேட கவனம் செலுத்தப்பட்டது. 

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்கும் நடைமுறையைப் பற்றியும் ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் போக்கு தொடர்பிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன்முறை மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான வேலைத்திட்டத்தின் போக்கு தொடர்பிலும் விஷேடமாக கலந்துரையாடப்பட்டது. 

நீண்டகால யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் இழந்த அபிவிருத்தி திட்டங்களை மீள வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி வழியுறித்தியுள்ளார். 

அனைத்து துறைகளினதும் ஆதரவுடன் எதிர்பார்க்கும் வளர்ச்சியை அடைந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது விளக்கியுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல அமைச்சர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதி செயலர் உதய ஆர். செனவிரத்ன, அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கில் டிசம்பர் 31க்கு முன்னர் காணிகளை விடுவிக்கவும் - ஜனாதிபதி வடக்கு கிழக்கில் டிசம்பர் 31க்கு முன்னர் காணிகளை விடுவிக்கவும் - ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 10/04/2018 04:14:00 PM Rating: 5