சுற்றாடலை அழிவுக்குள்ளாக்குவதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது - ஜனாதிபதி

-ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு

பதவியிலிருந்த பெரும்பாலான முன்னாள் ஜனாதிபதிகள், ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதும் நிதியமைச்சினை தங்களுக்கு கீழ் கொண்டுவந்த போதும் தான் அவ்வாறு செய்யாமல் ஜனாதிபதி பதவியின் எல்லையற்ற அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்ததனை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எதிர்கால தலைமுறைக்காக சுற்றாடலை பாதுகாக்கின்ற பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தான் சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்றுள்ளதாக குறிப்பிட்டார். 

முக்கியமான பதவிகளை விடுத்து சுற்றாடல் துறை அமைச்சை தான் தெரிவு செய்தது மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களினதும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காகும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

நேற்று (05) முற்பகல் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

சுற்றாடல் அழிவு இன்று மனிதனின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகவும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களினதும் எதிர்கால இருப்புக்காக சுற்றாடலை பாதுகாப்பது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார். 

மனிதனின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் சுற்றாடலை பிள்ளையை போன்று பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, சுற்றாடலை அழிவுக்குள்ளாக்குவதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். 

ஒரு மாவட்டத்தில் இடம்பெறும் சுற்றாடல் அழிவு குறித்து அம்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க அதிகாரிகளும் பொறுப்பு கூற வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் அழுத்தங்கள் இருக்குமானால் அது பற்றி தனக்கு அறியத்தருமாறும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். 

சுற்றாடலை பாதுகாப்பதற்கான அனைத்து சர்வதேச உடன்படிக்கைகளையும் இலங்கை பின்பற்றி வருவதுடன், சுற்றாடலை பாதுகாப்பதில் முக்கியமான பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி இத்தகைய சுற்றாடல் மாநாடு இடம்பெறுவது மாவட்ட மட்டத்தில் நிலவுகின்ற சுற்றாடல் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கு அனைவரும் செயற்திறனுடன் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 

அனைவரும் ஒன்றிணைந்து சுற்றாடல் உறுதிமொழியை எடுத்துக்கொண்டதன் பின்னர் தேசிய சுற்றாடல் மாநாடு ஆரம்பமானது. பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் மரக்கன்றுகளை வழங்கிவைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். 

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார். 

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்ஹ, மஹிந்த அமரவீர, றிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்கள் ஸ்ரீயானி விஜேவிக்ரம, வீரகுமார திசாநாயக்க, பிரதியமைச்சர்கள் அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மன்னார் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இதேநேரம் 2018 தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (05) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் மன்னார் மடு வீதி தம்பனைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. 

அரச அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் விரிவான சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் பேரில் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “புனரோதய“ (மறுமலர்ச்சி) தேசிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

இலங்கையின் வன அடர்த்தியை 32 சதவீதமாக அதிகரித்தல், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் தாக்கங்களை குறைத்தல் மற்றும் நாட்டை நீலப்பசுமை யுகத்தை நோக்கி கொண்டு செல்லுதல் என்பன இதன் நோக்கமாகும். 

மக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி கொண்டு செல்வதற்காக ஒக்டோபர் மாதம் தேசிய மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

வனப் பாதுகாப்பு திணைக்களம் 2018 வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் சுமார் இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 

வேப்ப மரக்கன்றொன்றை நட்டு 2018ஆம் ஆண்டிற்கான வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். 

இதனுடன் இணைந்ததாக பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மரநடுகை நிகழ்ச்சித் திட்டமொன்று இடம்பெற்றதுடன் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுடன் ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடினார். 
Image may contain: 13 people, people smiling, people standing and outdoorImage may contain: 5 people, people dancing, people on stage, people standing and weddingImage may contain: one or more people, crowd and outdoorImage may contain: one or more people and people standingImage may contain: one or more people and people standingImage may contain: one or more people and people standingImage may contain: one or more people and people on stageImage may contain: one or more people, crowd and outdoorImage may contain: one or more people, people sitting, crowd and outdoor
சுற்றாடலை அழிவுக்குள்ளாக்குவதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது - ஜனாதிபதி சுற்றாடலை அழிவுக்குள்ளாக்குவதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது - ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 10/06/2018 09:55:00 AM Rating: 5