இந்தோனேசியா சுனாமி - உயிருள்ளவர்களைத் தேடும் பணி ஆரம்பம்

இந்தோனேசியாவின் பாலு நகரத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உண்டான பாதிப்புகள் பெரிய அளவில் இருப்பது தெரிய வருகிறது. 

இதுவரை சுமார் 832 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், சடலங்களை ஒன்றாகப் புதைக்கும் நடவடிக்கையை தொடங்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இடிபாடுகளில் பலரும் உயிருடன் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கருதுகின்றனர். 

நிலநடுக்கத்தை அடுத்து, அவ்வப்போது அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பாலு நகரத்தில் உணவகம் மற்றும் ஷொப்பிங் சென்டர் கட்டட இடிபாடுகளை அகற்ற கனரக இயந்திர வாகனங்களுக்காக மீட்புப் பணியாளர்கள் காத்திருக்கின்றனர். 

"தொலைத் தொடர்பு, கனரக வாகனங்கள் மிகவும் குறைந்தளவிலேயே இருக்கின்றன. அதிக அளவிலான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளுக்கு இது போதாது" என தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு முகமையின் செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ தெரிவித்துள்ளார். 

வெள்ளிக்கிழமை அன்று 7.5 அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

பாலு தீவில் திருவிழா ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருந்த மக்கள் 6 மீட்டர் உயரத்துக்கு அலை எழுந்ததை பார்த்து பதற்றப்பட்டு குரல் எழுப்பிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி ஜோகோ விடோடோ, மீட்புப் பணிகளை இரவும் பகலும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

சர்வதேச உதவி மற்றும் நிவாரணங்களை பெற ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிதைந்த சாலைகள், சேதமடைந்த விமான நிலையம், தொலைதொடர்பு இல்லாமை என இவை எல்லாம் சேர்ந்து மீட்புப் பணிகளை கடினமாக்கி உள்ளன. நகரின் உட்புற பகுதிகளை தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறது. 

"இந்த சுகாமியின் தாக்கம் என்ன என்பது இன்னும் நிச்சயமாக தெரியவில்லை" என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

பாலு நகரில் ரோ ரோ என்ற விடுதி ஒன்றில் இடிபாடுகளுக்கு அடியில் உதவிகள் கோரி மக்கள் கதறும் குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதுவரை அங்கிருந்து 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என உதவியாளர் ஒருவர் சொன்னதாக ஏ எஃப் பி செய்தி முகமை கூறுகிறது. குழந்தை உட்பட பலரின் குரல்கள் கேட்பதாக அவர் தெரிவித்தார். 

"அவர்கள் உதவி கோரி வருகின்றனர். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் சிக்கியுள்ள அவர்களின் மனநிலையை சரிப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் அவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறோம். குடிநீர் மற்றும் உணவும் வழங்கினோம். ஆனால், அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்களுக்கு இடிபாடுகளில் இருந்து வெளியே வர வேண்டும்." 

பாலு நகரில் திறந்த வெளியில் மக்கள் உறங்குகின்றனர். வைத்தியசாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால், திறந்த வெளியில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இராணுவ மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

விமான நிலையத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ள இராணுவத்தினர், நிவாரணப் பொருட்கள் பெற்றும், காயமடைந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியும் வருகின்றனர். 

"மிகக் குறைந்த பொருட்களே இருப்பதால், உணவு, குடிநீர், மருந்து பொருள்களை எடுக்கலாம் என சேதமடைந்த கடைகளில் மக்கள் தேடுகின்றனர்" என்கிறார் ´சேவ் தி சில்ட்ரன்´ அமைப்பின் திட்ட இயக்குனர் டாம் ஹவெல்ஸ். 

"எங்களுக்கு வேறு வழியில்லை. உணவு வேண்டும்" என பொதுமக்களில் ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறினார். இதற்கிடையில் சடலங்களை புதைக்க பெரும் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.
இந்தோனேசியா சுனாமி - உயிருள்ளவர்களைத் தேடும் பணி ஆரம்பம் இந்தோனேசியா சுனாமி - உயிருள்ளவர்களைத் தேடும் பணி ஆரம்பம் Reviewed by Vanni Express News on 10/01/2018 11:20:00 PM Rating: 5