சீரற்ற காலநிலை - படையினர் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு

நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்தும் கனமழை தொடர்கிறது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய வானிலை தகவலின்படி நாட்டின் தென்மேற்கு பகுதியில் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவும் எனவும் மேற்கு, மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டகளிலும் சுமார் 100மில்லி மீற்றர் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கமைய, களனி, உடுகம, பிடிகல, நாகொட, வெலிப்பண்ண, ஹொரவெல, புளத்சிங்ஹல பலிங்கநுவர, வலல்ல, யடதொலவத்த, புத்தளம மற்றும் களனிமுல்ல ஆகிய பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகளுக்காக வள்ளங்கள், கவச வாகனங்கள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை பரிமாறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இராணுவ வீரர்கள் பாலம்பிட்டி பகுதிக்கு நீர் வழங்கும் பாயன்குலம் அணைக்கட்டில் ஏற்பட்ட நீர்கசிவினை தடுப்பதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டனர். குளத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கும் இத்தருணத்தில், படையினரால் மேற்கொள்ளப்பட்ட இத்துரித நடவடிக்கையின் காரணமாக பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கைப்படி சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை சுமார் 12,440 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை , வெள்ளம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அனர்த்த சம்பவங்கள் காரணமாக ஒன்பது உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், 19 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான சுமார் 5,800 க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், ராஜான்கனைய, பொல்கொல்ல மற்றும் லக்சபன உட்பட பல நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் அதிகரித்து காணப்படுவதால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலை - படையினர் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு சீரற்ற காலநிலை - படையினர் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு Reviewed by Vanni Express News on 10/10/2018 12:15:00 PM Rating: 5