மரமாட மயிலாட - சும்மா ஓர் அரசியல் அலசல்

-எஸ். ஹமீத்

வாப்பா குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார். வெளியே சென்றிருந்த மகன் வீட்டுக்குள் நுழைகிறான்.

'ஸதக்கல்லாஹு மவ்லானல் அழீம்...' என்று அப்போதைய ஓதலை முடித்துக் கொண்ட வாப்பா, ''என்ன மகன்...மரமும் மயிலும் ஒன்னாச் சேரப் போறதா ஒரு செய்தி வந்ததே, உண்மையா ?'' என்று கேட்டார்

''நானும் கேள்விப்பட்டேன் வாப்பா...ஒரு வகையில அதிர்ச்சியா இருந்துது. இன்னொரு வழியில ஆனந்தமாவும் இருந்துது...'' என்றான் மகன்.

''ஏன் அதிர்ச்சி…? எதுக்கு ஆனந்தம்?''

புரியாமல் வினவினார் வாப்பா.

''எப்பவுமே நடக்காது என்று நெனைச்சுக்கிட்டிருந்த ஒரு விடயம் இப்பிடித் திடீர்னு நடக்கப் போறத நெனச்சு மொதல்ல அதிர்ச்சியாயிருந்தது. ஆனா, இவ்வளவு காலங்கழிச்சு இப்பவாவது இந்த ஒன்னு சேரல் நடக்கப்போகுதேன்னு நெனைச்சு ஆனந்தமா இருந்துது..!''

மகன் விளக்கமளித்தான் .

''யா அல்லாஹ்…!'' என்று ஒரு நீண்ட பெருமூச்சின் பின்னர் கூறிய வாப்பா ''என் மனசுக்கென்னவோ இது நடக்காதுன்னு தோணுது மகன்!'' என்றார்.

மகன் புரியாது தந்தையின் முகம் பார்த்துப் புருவம் சுருக்கி, கேள்விகள் நிறைந்த பார்வையுடன் நிற்க, வாப்பா தொடர்ந்தார்.

''ஆமா மகன்...இந்த இணைவு பற்றிய உத்தியோகபூர்வ  அழைப்பை முதல் விடுத்தது யாருன்னு தெரியலே. என்னைப் பொறுத்தவரை மயில்தான் அடிக்கடி சேர்ந்து செயல்படணும்னு ஊடகங்களிலும் கூட்டங்களிலும் சொல்லிக்கிட்டிருந்துச்சு. ஆனா, மக்காவில் வச்சு  ஏதோ திடீர் ஞானம் பொறந்த மாதிரி ஒண்னாய்ச் சேர்ந்து இயங்குறதுக்கு மரம் ஒத்துக் கொண்டு தன்னோட  ஆறு கிளைகளையும் பக்கத்தில் வச்சுக்கிட்டு மயிலையும் அதன் நாலு  குஞ்சுகளையும் சந்திச்சு பேசியிருக்கு. ஆனா, அந்தப் பேச்சு என்னவோ, இப்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்கு மாத்திரம்தான் இணைஞ்சு செயற்படுறதெங்குற மாதிரித்தான் என்னோட அறிவுக்குப் படுது...''

வாப்பா இடைநிறுத்தி, மூச்சு வாங்கி, கழற்றித் துடைத்த மூக்குக் கண்ணாடியை மீண்டும் அணிந்தவாறு தொடர்ந்தார்.

''மகன்..இணையுறதென்று வெறும் ஆர்வக்கோளாறுல, ஒரு அவசரத்துல முடிவு எடுத்து ஊடகங்களுக்குப் படம் காட்டுறது ரொம்ப சுலபம் மகன்...ஆனா, அதைச் செயல்வடிவில  அமுலுக்கு கொண்டுவர ஆரம்பிக்கும்போதுதான் அங்கங்கே அணுகுண்டுகள் வெடிக்கத் தொடங்கும்...''

மகனின் கண்முழியிலிருந்தே தெரிந்தது, தனது தந்தை என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை என்பது.

தந்தை குரலைச் செருமிக் கொண்டு விளக்கத் தொடங்கினார்.

''மகன்... சேர்ரதுன்னு  முடிவு செய்தாயிற்று என்று வச்சுக்குவோம். மொதல்ல  யார் யாரோட சேர்ரதுன்னு கேள்வி வரும். மரம் மயிலோடயா, இல்லேன்னா, மயில் மரத்தோடயா?

சரி...யாரும் யாரோடயும் சேர வேணாம்...மரம் தன்னோட தோட்டத்தை விட்டு வெளியேறி, அதேபோல மயில் தன்னோட கூட்டை விட்டுப் பறந்து வந்து, ஒரு பொதுவான இடத்தில வச்சு சேர்ரதாகவே வச்சுக்குவோம். அப்புறம் ரெண்டும் சேர்ந்து ஒரு பொதுவான பெயரைத் தேர்ந்தெடுக்கிற குழப்பம் வரும். ஆனா, இது சின்னக் குழப்பம்தான். அதுக்கு முடிவு கட்டிடலாம். அதுக்கப்புறம் ஒரு பெரிய குழப்பம் வரும். அதுதான், யாரு தலைமை தாங்குறதெங்குற குழப்பம்…

'என்னோட நப்ஸு எனக்குத் தலைமைப் பதவி கேக்குது'ன்னு மரம் சொல்லும்...'உங்களுக்கு வயசாயிடுச்சு; நீங்க சுறுசுறுப்பா இயங்க முடியாது. அதனால நானே தலைவராயிருக்கே'ன்னு மயில் சொல்லும்…இதுல யாரும் விட்டுக்கொடுக்கச் சம்மதிப்பாங்கனு நான் நம்பமாட்டேன் மகன்….

இன்னொரு விஷயமும் இதுல இருக்கு. அது என்னன்னா, 'மரத்தின் தலைமைக்கு கீழ செயற்பட மாட்டோம்'னு மயில் குஞ்சுகள் சொல்லும்; மயிலின் தலைமையை ஏற்க மாட்டோம்'னு மரக்கிளைகள் சொல்லும்.

ஆக, குஞ்சுகளைத் தவிர்த்து மயிலும் கிளைகளை இழந்து மரமும் இணையிறதெங்குறது சாத்தியமேயில்லை மகன்….

எல்லாத்தையும்விட மோசமான இன்னொரு நிலைமையையும் எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் மகன்...மரத்தைப் பற்றிக்  குற்றங்களையும் குறைகளையும் சிலவேளைகளில் அவதூறுகளையும் பகிரங்கமாகவே சொல்லிக் கொண்டிருந்த மயில் குஞ்சுகளும் அவ்வாறே மயிலைப் பற்றி மிக மோசமாக விமர்சனம் செய்து கொண்டிருந்த மரக்கிளைகளும் எவ்வாறு ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பதெங்குற இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டு விடுவாங்க மகன்…..

உதாரணத்திற்கு, வேற்றினப்  பெண் மரத்துடன் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டதாகத் தமது சொந்தப பெயர்களில் விமர்சனம் செய்த மயில் குஞ்சுகளை மரம் எந்த வகையில் அரவணைக்கும்? அதுமாதிரியே. ஊழலும் களவும் செய்தது என மயிலை மிக வன்மமாகத் திட்டிக் கொண்டிருந்த மரக்கிளைகள் இனி எவ்வாறு மயிலை எதிர்கொள்ளும்...?''

வாப்பா இருமத் தொடங்கினார். உம்மா தண்ணீர் கொண்டுவந்தார்.

''சரி...சரி...போதும். பேசுறத நிப்பாட்டுங்க.தண்ணியக் குடிச்சிட்டுப் படுத்து ரெஸ்ட் எடுங்க!''

உம்மாவின்  கண்டிப்பு வாப்பாவைக் கட்டிப் போட்டது. பேசாமல் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டுத் தரையில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டார் வாப்பா.

ஆனாலும், வாப்பாவுக்குப் பேச இன்னும் எவ்வளவோ இருக்கிறது!
மரமாட மயிலாட - சும்மா ஓர் அரசியல் அலசல் மரமாட மயிலாட - சும்மா ஓர் அரசியல் அலசல் Reviewed by Vanni Express News on 11/12/2018 06:02:00 PM Rating: 5