கௌரவ அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், ரவுப் ஹகீம் ஆகிய தேசியத் தலைவர்களே

-சப்ராஸ் அபூபக்கர்

கௌரவ அமைச்சர்களே... 
நான் உங்கள் இருவரையும் அன்பாய் நேசிக்கிறேன். உங்கள் தலைமைத்துவப் பண்புக்கு தலை சாய்கிறேன். வல்ல இறைவன் உங்கள் நற்செயல்களைப் பொருந்திக் கொள்ளட்டும்.

கௌரவ அமைச்சர்களே. ஒற்றுமை எனும் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் எனச் சொன்ன இஸ்லாம் கயிறிழுக்கச் சொல்லவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நீங்கள் இரண்டு பேருமாய் உங்கள் கட்சி ஆதரவாளர்களோடு இறைவன் நேசிக்கும் புனித பூமிக்கு உம்றா கடமையை நிறைவேற்றச் சென்றிருப்பதில் இதயம் பூரிக்கிறது. அந்தப் பக்கம் 07 பேர், இந்தப் பக்கம் 05 பேர் தாய் நாட்டிலிருந்து உம்றாக் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ளீர்கள். சந்தோசம்.

ஆனால் மயில் கட்சியில் 05 பேர், மரக் கட்சியில் 07 பேர் என்று அவரவர்க்கு இஷ்டம் போல் மார் தட்டுகின்ற போதுதான் அறுவறுக்கிறது. மயிலென்றும், மரமென்றும் எங்களைப் பிரித்தது யார்? அல்குர்ஆன் என்றும் சுன்னாஹ் என்றும் மட்டுமே வாழப் பழகிய எங்களை யார் இப்படி கூறு போட்டது? 

தேசியத் தலைவர்களே.... நீங்கள் இருவரும் இறைநேசர்கள், பயபக்தியாளர்கள் என்பது எனக்கு நன்றாய் தெரியும். நீங்கள் அஞ்சுவதும், அடி பணிவதும் இறைவனுக்கு என்பதும்  தெரியும். எம் முஸ்லிம் சமூகத்தின் மீது தீராத பற்றும், அன்பும் கொண்டவர்கள் என்பதும் தெரியும். அதனால்தான் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு வரும் நேரமெல்லாம் நெஞ்சை நிமிர்த்தி சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றீர்கள். அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்ளட்டும்.

கௌரவ தேசியத் தலைவர்களே...
நான் இந்த தகவலை எழுதும் நேரம் நீங்கள் இருவரும் புனித மக்கமா நகரிலே உம்றாக் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இருவரோடு சேர்த்து மொத்தமாக 12 பேர் கஃபாவை தவாப் செய்கிறீர்கள். எல்லோரையும் இன, மொழி வேறுபாடின்றி ஒன்று சேர்க்கும் கஃபா ஆலயம் உங்கள் 12 பேரினது மனதையும் ஒன்று சேர்க்காதா என்கிற ஆதங்கத்தோடு இந்த வரிகள் எனக்குள் எழுகிறது. 

ரிசாதும், ஹகீமும், ஹிஸ்புல்லாஹ்வும், முஜீபுர் ரஹ்மானும், அதாவுல்லாஹ்வும், ஹஸன் அலியும், என எத்தனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமக்குள் இருக்கின்றனர். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாம் முஸ்லிம்கள் என்று நிரூபிக்க மாட்டீர்களா? நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியை ஆரம்பித்தால் ஒட்டுமொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களும் உங்கள் பின்னால் நிற்பார்கள் என்கிற நம்பிக்கை உங்களுக்குள் இல்லையா?

வெறும் பஞ்சத்துக்காக மஞ்சள் கவரை நம்பும் சில விசமிகளைக் கொண்ட மாயாஜால உலகத்தில் எம் முஸ்லிம் தலைமைகள் நீதமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என நாங்கள் ஆசை கொள்கிறோம். அந்த அபூபக்கர் ரழி, உமர் ரழி, உஸ்மான் ரழி ஆகியோர்களது ஆட்சியைக்  கேட்கவில்லை. ஒற்றுமையாய் வாழச்சொன்ன இஸ்லாத்தில் ஒற்றுமையைத்தான் பார்க்க விரும்புகிறேன். 

உங்கள் 12 பேரினது உள்ளமும் அந்தப் புனித கஃபாவில் ஒன்றிணைந்தால் எமக்கு மஹிந்த, ரணில், மைத்திறி யார் வந்தாலும் ஒரு பொருட்டே கிடையாது. ஏனெனில் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் ஒரே கட்சி, ஒரே தலைமைத்துவத்தின் கீழ்.....

இப்படி ஒரு கனவு இன்று எனக்குத் தோன்ற வேண்டும் என ஆசை. கனவிலாவது இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அதை விட சந்தோசம் வேறு இல்லை.
கௌரவ அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், ரவுப் ஹகீம் ஆகிய தேசியத் தலைவர்களே கௌரவ அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், ரவுப் ஹகீம் ஆகிய தேசியத் தலைவர்களே Reviewed by Vanni Express News on 11/08/2018 11:54:00 PM Rating: 5