ஜனாதிபதியிடம் விக்னேஸ்வரன் அவசர கோரிக்கை

தன்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீளவும் வழங்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

நேற்று (28) ஜனாபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அவரது கோரிக்கையை தெரிவித்துள்ளார். 

வடமாகாண முதலமைச்சராக என்னுடைய பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் என்னுடைய பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளனர். 

சில காலங்களுக்கு முன்னர் என்னுடைய உயிருக்கு ஆபத்து என்பது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபருக்கும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் தெரிவித்திருந்தேன். அது சம்பந்தமான செய்திகளை எமக்கு வழங்கியவர் அம்பலாங்கொடையைச் சேர்ந்த டி சில்வா என்பவர். 

நீங்கள் யாழ்ப்பாணம் வந்த போது உங்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் இது பற்றித் தெரிவித்திருந்தேன். இதில் சந்தேகத்திற்குரியவராகக் கணிக்கப்பட்டவர் தற்போது கைது பண்ணப்பட்டிருக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா என்பவர். 

மேற்படி உயிராபத்து சம்பந்தமாக பொலிஸ் மா அதிபரும், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவர்களுக்கு இது பற்றி எழுத்தில் தெரிவிக்குமாறு கோரியிருந்தார்கள். இது என்னால் செய்யப்பட்டது. 

இந்தக் கடிதத்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னுடைய வாசஸ்தலத்திற்குரிய பாதுகாப்பு கைவாங்கப்பட்டதெனினும் என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இற்றை வரையில் தொடர்ந்து வந்துள்ளது. 

இன்று காலை யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக மேற்பார்வையாளர் என்னுடைய பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்களை உடனே பொலிஸ் நிலையத்தில் வந்து கையெழுத்திடுமாறு கோரியிருந்தார். 

நான் தற்போது கொழும்பில் என்னுடைய பாதுகாப்பு அலுவலர்களுடன் தங்கியிருக்கின்றேன். எனினும் இரு அலுவலர்கள் இன்று காலை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். 

பொலிஸ் மா அதிபருக்கு அறிகையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு மேன்மை தங்கிய உங்களிடம் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். கிழக்கு மாகாண முன்னைய முதலமைச்சருக்கும் தற்போதும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக அறிகின்றேன் என அவர் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
ஜனாதிபதியிடம் விக்னேஸ்வரன் அவசர கோரிக்கை ஜனாதிபதியிடம் விக்னேஸ்வரன் அவசர கோரிக்கை Reviewed by Vanni Express News on 11/29/2018 03:11:00 PM Rating: 5