சிறைச்சாலைகளிலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள்

-ஐ. ஏ. காதிர் கான்

இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை, டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு, இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம் ஆகிய மெகசீன் சிறைச்சாலைகளிலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள், தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் விரைவாக அது குறித்த தகவல்களைத் தெரிவிக்குமாறும், பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது.

இது தொடர்பிலான பிரச்சினைகளை, 1911என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அறிவிக்குமாறும், பரீட்சைகள் திணைக்களம் வேண்டியுள்ளது.

இம்முறை 4,661 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், நான்கு இலட்சத்து 22 ஆயிரத்து 850 பாடசாலை மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

அத்துடன், இரண்டு இலட்சத்து 33 ஆயிரத்து 791 தனியார் பரீட்சார்த்திகள், இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலைகளிலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் சிறைச்சாலைகளிலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் Reviewed by Vanni Express News on 11/28/2018 06:10:00 PM Rating: 5