க.பொ.த. பரீட்சைக்கு பொலிஸாரும் அவசர பொலிஸ் பிரிவினரும் கடமையில்

-ஐ. ஏ. காதிர் கான் 

எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு, நாடளாவிய ரீதியில் ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ். பிரகாசன் தெரிவித்துள்ளார்.

இப்பரீட்சைக்கு 422,850 பாடசாலை பரீட்சார்த்திகளும் 233,791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 656,641 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, 4661 பரீட்சை நிலையங்களில் 541 இணைப்பு நிலையங்களும், 33 பிராந்திய நிலையங்களாகக் கொண்டு இப்பரீட்சையை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேட பரீட்சை நிலையங்களாக இரத்மலானை, தங்கல்லை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளிலும் இப்பரீட்சைக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்கள உதவி ஆணையாளர் எஸ். பிரகாசன் இப்பரீட்சை தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கும்போது, பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுகின்ற அனைவரும் சிறப்பாகவும், சரியாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்படவேண்டும். அத்துடன், மாணவர்களுடன் பொறுப்பு வாய்ந்ததாகவும் செயற்படவேண்டும்.

இப்பரீட்சையை, வினைத்திறனுடன் நடாத்தவேண்டும்.

இதேவேளை, பரீட்சை நிலையங்கள், இணைப்பு நிலையங்களில் ஆயுதம் தரித்த பொலிஸார் கடமையாற்றுவது உசிதமானதாகும். அவ்வாறு கடைமையாற்றத் தவறும் பொலிஸாரை பொறுப்பானவர்கள் கண்காணிக்க வேண்டும்.

இது தவிர, பரீட்சை மோசடிகளை முன்கூட்டியே அனுமானித்து மோசடிகள், குழப்பங்களைத் தவிர்ப்பது மற்றும் மது போதையில் பரீட்சை நிலையங்களில் செயற்படுவது என்பன போன்ற விடயங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். மேலும், பரீட்சைக் கடமைகளில் பொலிஸார், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் அவசரப் பொலிஸ் பிரிவு ஆகியன ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த. பரீட்சைக்கு பொலிஸாரும் அவசர பொலிஸ் பிரிவினரும் கடமையில் க.பொ.த. பரீட்சைக்கு பொலிஸாரும் அவசர பொலிஸ் பிரிவினரும்  கடமையில் Reviewed by Vanni Express News on 11/28/2018 06:27:00 PM Rating: 5