உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு - அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏற்பாடு

-ஐ. ஏ. காதிர் கான் 

எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். கடந்த கால யுத்தத்தில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்கள் முகங்கொடுத்த சகல பிரச்சினைகளுக்கும், தனது தலைமையிலான அரசாங்கத்திலேயே தீர்வுகள் காணப்பட்டன.

மூதூரில் ஏற்பட்ட பிரச்சினைகள், முஸ்லிம்கள் வட கிழக்கில் விவசாயம் செய்ய முடியாத நிலைமை, வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களது மீள் குடியேற்றப் பிரச்சினைகள் என்பவற்றை, தானே தீர்த்து வைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமா சபைக்கும் இடையிலான சந்திப்பு, (12) திங்கட்கிழமை மாலை, மாளிகாவத்தையில் உள்ள ஜம் - இய்யத்துல் உலமா செயலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு, ஜம் - இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ் ஷேக் எம்.ஏ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்றது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தேசிய சுதந்திர முன்னணியின் அமைப்பாளர் மொஹமட் முஸம்மில் மற்றும் பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் தலைவர்கள் உட்பட உலாமாக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பினை, அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏற்பாடு செய்திருந்தார்.

இங்கு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது, நாட்டின் முன்னேற்றத்திற்கு சகல தரப்பினரும், சகல இனங்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். நான் ஆட்சியில் இருந்தபோது இன, மத பேதங்களின்றி எனது செயற்பாடுகளை மேற்கொண்டேன். இனவாத செயற்பாடுகள் நாட்டில் தலை தூக்காமல் இருக்க, என்னாலான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.

அளுத்கம சம்பவத்தின்போது நானும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளாரும் நாட்டில் இருக்கவில்லை. அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களது வீடுகளை மீள நிர்மாணித்துக் கொடுத்தேன்.

முஸ்லிம்களுக்கு இனி ஒருபோதும் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது. அரசியல் இலாபங்களுக்காகச் செயற்படும் இன ரீதியான கட்சிகள் சகல இனங்களிலும் காணப்படுகின்றன. அவர்களே அவ்வப்போது இனங்களுக்கிடையில் பிளவுகளையும் முறுகளையும் ஏற்படுத்துகின்றார்கள்.

தேசியக் கட்சிகளில் அங்கம் வகிக்கும்போது, இவ்வாறான இன, மத ரீதியான பிரிவுகள் இன்றி "நாம் இலங்கையர்" என்ற ரீதியில் செயற்பட முடியும். நாம் இனவாதத்துடன் ஒருபோதும் செயற்படவில்லை என்றார்.

அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ் - ஷைக் அர்கம் நூராமித்,

உலமா சபை உப தலைவர் தாஸிம் மௌலவி ஆகியோரும் இங்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா இச்சந்தர்ப்பத்தில் பிரதமரிடம், மீண்டும் அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் போன்று ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமா...?, மீண்டும் ஹலால் பிரச்சினைகள் தூண்டப்படுமா...?, முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், உடைமைகள் மற்றும் சொத்துக்கள் போன்றவற்றிற்கு உங்கள் புதிய அரசின் கீழ் உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு கிடைக்குமா...? என, கேள்விகளை எழுப்பினார். அதற்கு பிரதமர், இனி வரும் எனது அரசாங்கத்தில், இவ்வாறான எந்தப் பிரச்சினைகளும் இடம்பெற வழியேற்படுத்தப்படமாட்டாது. 

அதற்கான எந்த கைங்கரியங்களும் நம்மிடமில்லை. இனிமேல் இவ்வாறான கசப்பான சம்பவங்கள் நிச்சயம் எனது அரசாங்கத்தின் கீழ் நடைபெறமாட்டாது. இதனை நான், ஜம் - இய்யத்துல் உலமா முன்னிலையில் உங்களிடம் சான்று பகர்கின்றேன். அத்துடன், இதற்கு உத்தரவாதமும் வழங்குகின்றேன். 

எனது எதிர்வரும் திட்டங்களுக்கும், புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் உங்களின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றேன் என்று, அமைச்சரிடம் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்த நாட்டினை இன ரீதியாகப் பிரித்துப் பார்த்தால், கொழும்பையும் வெள்ளவத்தையையும் துண்டு துண்டுகளாகப் பிரிக்கவேண்டிய நிலைமை ஏற்படும். ஒரு இறைமையுள்ள நாட்டினுள் சகல சமூகங்களும் ஒன்றாக இணைந்து வாழும் முறையே, சகலருக்கும் சிறந்தது என்றும், பிரதமர் அமைச்சரிடம் குறிப்பிட்டார்.
உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு - அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏற்பாடு உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு - அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏற்பாடு Reviewed by Vanni Express News on 11/13/2018 02:16:00 PM Rating: 5