ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கலந்துரையாடல்

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

னாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஜனாதிபதி செயலணிகளின் நடவடிக்கைகள் மற்றும் விசேட நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், கிராமசக்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம், 2400 எல்லங்கா குளங்களின் புனர்நிர்மாண நிகழ்ச்சித்திட்டம், தேசிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம், விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம். மற்றும் எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆகியவற்றின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

வறுமையை ஒழிக்கும் அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சித்திட்டமாக கிராம சக்தி மக்கள் இயக்கம் தற்போது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நடவடிக்கைகள் குறித்து மேலும் விரிவான விளக்கத்தை பிரதேச அரச அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

கிராமிய மக்களை வினைத்திறன் மிக்க பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, கிராம சேவகர் மட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கிராம சக்தி உற்பத்தி சங்கங்களுக்காக வழங்கப்படும் ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

2020ஆம் ஆண்டில் இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை பிள்ளைகளுக்கு பால் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார். 

சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மர நடுகை தேசிய நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது. 

மேலும் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மழை காலநிலையுடன் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு சிறந்த காலநிலை உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாய நடவடிக்கைகளுக்காக விவசாய சமூகத்திற்கு இலவசமாக விதைகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துமாறும் பணிப்புரை விடுத்தார். 

எல்லங்கா நீர்ப்பாசன புனர்நிர்மாண நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தற்போது நிலவும் மழை காலநிலை காரணமாக குளங்களை திறந்துவிடும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தபோதும் குளங்களை சுத்திகரிக்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

2030ஆம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள தேசிய பேண்தகு கருத்தாய்வின் இது வரையிலான முன்னேற்றம் மற்றும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது. 

மக்களின் எதிர்பார்ப்புக்களை புரிந்துகொண்டு அவர்களது பிரச்சினைகளை தீர்த்து, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் உரிய முறையில் முன்னெடுத்து இதன் பெறுபேறுகளை மக்களுக்கு விரைவாக கிடைக்கச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அதிகாரிகளினதும் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி, மேலும் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தின் அனைத்து மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர். 
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கலந்துரையாடல் Reviewed by Vanni Express News on 11/14/2018 11:33:00 PM Rating: 5