10 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கைது

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரசினி கடவு பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயார் கண்ணூர் மகளிர் பொலிஸில் புகார் செய்தார். 

இதைத் தொடர்ந்து மகளிர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அந்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்தார். 

அந்த மாணவிக்கு பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் கூறியபடி மாணவி ஒரு லாட்ஜூக்கு சென்ற போது அவரை பள்ளி சீருடையை மாற்றி விட்டு வேறு உடை அணிய செய்துள்ளார். 

பிறகு அந்த மாணவியை லாட்ஜ் அறையில் வைத்து பூட்டி விட்டு அந்த பெண் சென்று விட்டார். 

அந்த பெண் சென்ற சிறிது நேரத்தில் லாட்ஜ் அறைக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அந்த மாணவியை கூட்டுபலாத்காரம் செய்தனர். மேலும் அவரை தங்களது செல்போன்களில் ஆபாச படம் எடுத்தனர். 

அந்த ஆபாச படத்தை காட்டி மாணவியை மிரட்டி மேலும் 20 பேர் அவரை கற்பழித்து உள்ளனர். இது பற்றி அறிந்த அந்த மாணவியின் சகோதரன் கற்பழித்தவர்களை சந்தித்து தட்டி கேட்டார். அந்த கும்பல் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது. 

இந்த தகவல்களை பொலிஸாரிடம் கூறி மாணவி கதறி அழுதார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அதன்படி மாணவியை கற்பழித்ததாக சந்தீப், சம்சுதீன், அயூப், சமீர் மற்றும் லாட்ஜ் மேலாளர் பவித்திரன் ஆகிய 5 பேரை பொலிஸார் கைது செய்தனர். 

மேலும் மாணவியை கற்பழித்தது தொடர்பாக 19 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் இரவு டியூசனுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் அந்த மாணவியை கடத்த முயன்றது. இதனால் பயந்து போன அந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பி அருகில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தார். இதனால் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்று விட்டது. இது பற்றி பொலிஸில் புகார் செய்யப்பட்டது. பொலிஸார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் விசாரணை நடத்தி காரின் நம்பரை கண்டு பிடித்தனர். அதன் மூலம் கார் உரிமையாளரின் முகவரி மற்றும் அவரது செல்போன் நம்பரை அடையாளம் கண்டனர். 

செல்போன் டவர் மூலம் துப்பு துலக்கிய போது பழனியில் உள்ள ஒரு லாட்ஜில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கேரள பொலிஸார் அங்குச் சென்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சபின் (வயது22), நெடுமங்காட்டைச் சேர்ந்த விஷ்ணு (25), சரண் (21), வட்டியூர்காவைச் சேர்ந்த சைன் (36) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

விசாரணையில் மது போதையில் காரில் சென்ற இவர்கள் 4 பேரும் மாணவி தனியாக நடந்துச் செல்வதை பார்த்ததும் அவரை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
10 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கைது 10 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கைது Reviewed by Vanni Express News on 12/06/2018 04:56:00 PM Rating: 5