கல்முனை மாநகரமும் சாய்ந்த மருது மக்களின் கோரிக்கையும்

-ஐனுதீன், சவூதியிலிருந்து.

நாலா பக்கமாகவும்  அரங்கேறிக் கொண்டிருக்கும் இழு பறியினால்  கல்முனை மாநகர சபை சிதைந்து கொண்டிருக்கின்றது. மர்ஹூம் அஸ்ரப் சேர் அவர்களின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 90 வீதத்துக்கு மேலாக அதிகாரம் செலுத்திய கல்முனை சபை இன்று சாய்ந்த மருது சுயேட்சைக் குழு, TNA, ஐ தே கட்சி மற்றும் NFGG , SLMC  என பெரிய கூட்டணி அமைத்து மாநகரை ஆளவேண்டிய நிலைக்கு வந்தும், 2019 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியினை கண்டுள்ளமை வேதனை தரும் விடையமாகும். இது சம்பந்தமாக சின்ன ஆய்வொன்றைக் காண்போம்.

அதாவது, நிலப்பரப்பு, மக்கள் தொகை , வருமானங்களின் அடிப்படையில் சாய்ந்த மருது , கல்முனை, மருத முனை ஆகிய ஊர்களை உள்ளடக்கியதாக கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டது. இதில்  சாய்ந்த மருது தனியாகப் பிரிந்து செல்வதற்கான மக்கள் போராட்டத்தின்  விளைவுதான் தற்போதைய பிரச்சினைகளுக்கு முதல் காரணமாகும்.

சாய்ந்த மருது மக்களின் நியாயமான கோரிக்கையினை வழங்கும் பட்சத்தில் கல்முனை தனது மாநகர சபை அந்தஸ்த்தை இழந்து தனிமையில் விடப் பட்டு விடும் என்ற சுயநலத்தன்மை இருந்தாலும் பல கட்சிகளின் வெற்றி தோல்விகளையும் இது நிர்ணயிக்கும் ஒரு நிகழ்வாகவும் அமையும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
மேலும் சாய்ந்த மருது தனியாகப் பிரிந்தால் கல்முனையில் காங்கிரஸ் தமிழ்  கூட்டணியிடம் சரணகதியாகும் ஒரு நிலையும் வரலாம்.தமிழ் கூட்டணி பெரும் பான்மையான ஆசனங்களைப் பெற்று கல்முனையை ஆளும் நிலைக்கும் வரலாம், அதே வேளை சாய்ந்த மருது மக்கள் சக்தி தனிக் கட்சியாக மாற்றம் பெற்று அங்கும் காங்கிரஸ் மற்றும்  ACMC,     ஐ தே கட்சிகள் தனது செல்வாக்கை இழக்க நேரிடும் நிலையும் வரலாம்.இதனால் சாய்ந்த மருதை தனியாக பிரிந்து செல்ல காங்கிரஸும் ஏனைய கட்சிகளும்  இடம் கொடுக்காது. 

மறு புறம் சய்ந்த மருது பிரிந்தால் அது நூறு வீதம் முஸ்லிம் சபையாக அமையும் சூழல் ஏற்படும்.அப்படி அமைந்தால் கூட்டணி அங்கு பின் வரிசைக்குத் தள்ளப்படும்  என்பதாலும், அதே வேளை கல்முனையில் ஏனைய முஸ்லிம் கட்சிகள்  ஒன்றிணைந்து UNP  யும்  இணைந்தாலும் அந்த சபையில் கூட்டணியின் செல்வாக்கு மூன்றாம் நிலைக்குத் தள்ளப் படும் என்பதாலும் தமிழ் கூட்டணியும் பிரிந்து செல்லத் துணை நிற்காது. கல்முனையும் சாய்ந்த மருதும் இணைந்து இருக்கும் போது அந்த முழு சபையிலும் உள்வாங்கப்பட்ட தமிழ் மக்களின் வாக்குகள் ஒன்றாகும் போது கூட்டணிக்கு அதிகமான ஆசனங்கள் கிடைக்கும்.பிரிந்தால் பல ஆசனங்கள் இல்லாது போகும்.இதனால்  தமிழ் தேசியக் கூட்டணியும் பிரிந்து செல்ல இடமளிக்காது.

அடுத்து  ACMC யைப் பொறுத்த மட்டில் சாய்ந்த மருது சுயேட்சையினர் ரிஷாத் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகச் சொல்லும் கதை சும்மா ஒரு கட்டுக் கதையாகும்.அந்தத் தோடம் பழச்சின்ன சுயேட்சையினர் எந்தக் கட்சிக்கும் ஒத்துழைப்பு  வழங்க முன் வராதவர்கள்.அவர்கள் நோக்கம் தனியாகப் பிரிவதாகும் . ஆதலால் இணைந்திருந்தால் ACMC  ஜமில், மீராசாய்பு போன்றோர்களை வைத்து சில ஆசனங்களை மாநகர சபையில் பெற முடியும்.பிரிந்து சென்றால் பெரிதாக ACMC இரண்டு சபையிலும் செல்வாக்கு செலுத்தவும் முடியாது. அதே நேரம் பிரிவுக்குத் துணை நின்று ACMC  கல்முனையைப் பகைத்தும் கொள்ளாது.அதனால் பிரிந்து செல்ல ACMC சும் துணை நிற்காது. இப்படியான குழப்ப நிலை இருக்கும் போதுதான் வருங்காலங்களில் ACMC  யினர்களினாலும், SLMC யினர்களினாலும் இதை ஒரு காரணமாக வைத்து மக்களைக் குழப்பி  சில ஆசனங்களைப்  பெறவும் முடியும்.

மேலும் ஐ, தே, கட்சி சென்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது சாய்ந்த மருதுவை தனியாகப் பிரிந்து செல்ல தனது கட்சியினால் முடிந்த அனைத்து வகை உதவிகளையும் செய்து தரும் என்றார் ரணில் அவர்கள். ஆனால் அதுவும் தற்போது சாத்தியப்படாது போயுள்ளது.  பிரிந்து போக ஒரு போதும் தயாக்கமகே துணை வரவும் மாட்டார். பிரிந்தால் ஐ தே கட்சியினால் சாய்ந்த மருதுவில் வெல்ல முடியாத சூழல் வந்தாலும் கல்முனையில் பெரிதாக வெற்றியீட்டவும் முடியாது. அது அம்பாறை மாவட்ட சிங்கள மக்களிடம் சல சலப்பை ஏற்படுத்தும். ஆதனால்     ஐ தே கட்சியினர்களும் விலகித்தான் நிற்க வேண்டிய ஒரு நிலை வந்துள்ளது.

இதே நேரம் நாம் இன்னும் ஒன்றையும் எண்ண வேண்டும்.அதாவது வரும் மாகாண சபை தேர்தல் என்றாலும் சரி பொதுத் தேர்தல் என்றாலும் சரி சாய்ந்த மருது அந்த இடத்தில்  ACMC  க்கும்  SLMC க்கும் உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கும் ஒரு சக்தியாகவும் திகழ்வார்கள் என்பதில் ஐயப்பாடு இல்லை. இதிலிருந்து மீண்டுவர காங்கிரஸ் முன்னைய போல் திள்ளு முள்ளு அரசியல் செய்யாது சிறந்த ஒரு வழியினைக் கையாளவேண்டிய நிலைக்கு வர வேண்டும். அது எமது முஸ்லிம் சமூகத்தின் வெற்றியாக அமையவும் வேண்டும்.

ஆகவே நிலைமை இப்படியிருக்கும் போதுதான் சுயேட்சைக் குழுவினர்கள் தங்களது ஆதரவினை விலக்கிக் கொண்டனேர் இதன் காரணமாக கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வியினை சந்தித்தது. இதை ஒரு சில அரசியல் எழுத்தாளர்கள் சூழ்ச்சி என்று  சித்தரித்தும்  ஒரு சமூகத்தின் ஞாயமான கோரிக்கையினை  திசை மாற்றலாம். சிலர் சரியான முடிவு என்றும் புகழலாம். இவைகளைக் கருத்தில் கொள்ளாது கௌரவ அமைச்சர்களானே ரிஷாத் அவர்களும் ஹக்கிம் அவர்களும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து சாய்ந்த மருது மக்களின் கோரிக்கைகளுக்கு நீண்ட கால முடிவாக ஒரு நிறந்தரமான முடிவு எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் வரும் காலங்களில் மக்களைக் குழப்பி அரசியல் செய்யும் தீவிரவாதப் போக்காளர்களுக்கு வழி அமைத்துக் கொடுப்பதாக அமைந்து விடும். வரும் ஆண்டு அரசியல் குழப்பமான ஆண்டாக பிறக்கப் போகிறது நாங்கள் ஒன்று படும் நேரமும் இதுதான் இன்ஷா அல்லாஹ் ஒன்று பட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.

நன்றி,
கல்முனை மாநகரமும் சாய்ந்த மருது மக்களின் கோரிக்கையும் கல்முனை மாநகரமும் சாய்ந்த மருது மக்களின் கோரிக்கையும் Reviewed by Vanni Express News on 12/30/2018 03:02:00 PM Rating: 5