முசலியின் அபிவிருத்தி - யாரால், எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்...?

-இஸ்ஸதீன் றிழ்வான்

30 வருட யுத்தம், யுத்த காலத்தில் அகதியாக வாழும் காலத்தில் அகதி முகாம்களின் சோகங்ககள் பேசி 2 தசாப்தங்களை கடத்தினோம், வாழ்ந்த ஓலைக்குடிசைகளுல் வடிந்த மழைத்துளிகள் பற்றி கதை பேசினோம்.

யுத்தம் முடிவுற்று மீள்குடியேற்றம், வட்ஸ்அப் குழுக்களில்தான் அதிகமாக மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்று பல விடயங்களை பேசிப் பேசி காலம் கடந்துபோகிறது.

அரசு நியமிக்கும் அரச‌ அதிகாரிகள், மீள்குடியேற்ற செயலணிகள் தங்களுக்கு கிடைக்கும் நிதியை அடிப்படையாகக்கொண்டு அல்லது அவர்கள் அழைத்துவரும் நிதிநிருவனங்கள் விரும்பும் வேலைத்திட்டங்கள் மட்டுமே கவனத்தில்கொள்ளப்படுகிறது.

ஆனால் அபிவிருத்தியடைந்த நகரங்களை அடிப்படையாக்கொண்டு ஒரு பிரதேசத்திற்கு தேவையான திட்டவரைபு ஒன்றை மேற்கொல்லும் முறைமை மேற்கொள்ளப்படல்வேண்டும். 
முசலிப் பிரதேசத்தில் அங்கம்வகிக்கும் எல்லா கிராமங்களையும் உள்ளடக்கிய கல்விமான்கள், அனுபவாசளிகள், பல்துறைசார் சிந்தனையாளர்களையும் இணைத்த குழு ஒன்றை அமைக்கவேண்டும்.

சிவில் சமூகத்தை மையமாகக்கொண்டு, முசலிப் பிரதேச அபிவிருத்திக்குழு அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்தி, கள ஆய்வுகளை மேற்கொண்டு தேவைகளை பட்டியலிடவேண்டும்.

முசலிப்பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தின் சிறப்பம்சங்கள், வசதிவாய்ப்புக்கள் குறித்த ஆய்வுமேற்கொள்ளப்படல் வேண்டும். 
குறுகிய‌, நீண்டு கால வேலைத்திட்டங்கள் பட்டியலிடப்படல்வேண்டும், அரச அல்லது அரசசார்பற்ற நிருவனங்கள் மூலம் ஒதுக்கப்படும் நிதியை இந்த அடையாளப்படுத்தப்பட்ட பட்டியலினூடாக ஊர், கட்சி என்ற பாரபட்சமற்று முன்னெடுத்தல் வேண்டும்.

முசலிப்பிரதேசத்தின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், வாழ்வாதாரம், கலை கலாச்சாரம், கிராமிய உட்கட்டமைப்பு என்று எல்லாத்துறைகளையும் உள்ளடக்கியதான முன்மொழிவுகள் இடம்பெறல்வேண்டும். விளையாட்டு மைதானம் தேவை என்பதற்காக எல்லா ஊரிலும் விளையாட்டு மைதானம் கட்டத்தேவையில்லை, 
கைத்தொழில் பேட்டை வேண்டும் என்பதற்காக எல்லா ஊர்களிலும் கைத்தொழில் பேட்டை நிர்மாணிக்கத்தேவையில்லை, 
துரைமுகம் தேவை என்பதற்காக எல்லா ஊர்களிலும் துரைமுகம் கட்டத்தேவையில்லை, உயர்கல்விக் கூடங்கள் தேவை, அதற்காக முசலிப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு உயர்கல்விக்கூடங்கள் தேவையில்லை.

குறுகியகால (Short term), நீண்டகால (long term), அவசர கால (Very urgent and very important) வேலைத்திட்டங்கள், என்று தேவைக்கேற்ப திட்டங்களை பிரிப்பதனூடாக திட்டங்களை வேலைகளை மக்களுக்கு சரிவரகொண்டுசேர்க்கமுடியும்.

ஊரில் பாதை இல்லை எனும் போது விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுமதில் கட்டுவது எப்படி நியாயம்..?
குடிநீர் இல்லை எனும் போது மரநடுகை திட்டம் எதற்கு..? என்ற கேள்விகள் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. 
கடந்தகாலங்களில் பிரதேச அபிருத்திக்கு என வந்த நிதி சில முறைகேடான ஆலோசனைகள், 

கட்சி பேதம், ஊர் வாதம் என்ற காரணங்களால் திரும்பிச்சென்று விட்டதை நாம் அறிவோம்.  ஆனால் இது தொடர்ந்தும் நடைபெறக்கூடாது என்பதால் இந்த விடயங்களை நினைவுபடுத்துகின்றேன். 
பிரதேச அபிவிருத்தி என்று சிந்திக்கும் போது கீழ்வரும் விடயங்களை கவனத்தில்கொள்வோம் குக்கிராமங்களை கட்டியெகழுப்புவதற்கான ஆலோசனையாக சிலவற்றை இங்கு பட்டியலிட்டிருக்கின்றேன், எதிர்காலங்களில் மீதியை சமர்ப்பிப்பேன்.

1. இதுவரை வீடில்லாத, ஓலைக்குடுசைகளில் வாழும் குடும்பங்களுக்கு வீடு வழங்குதல்,

2. இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புக்கள் வழங்கப்படவேண்டும், (சூரிய சக்தி மற்றும் காற்று ஆலைகள் மூலம் மின் சக்தியை உற்பத்தி செய்தல், இவற்றின் மூலம் எமது பிரதேசங்கள் அனுபவித்து வரும் தொடரான வரட்சிக்கு முடிவு காணலாம்)

3. பாடசாலைகள் தரமுயர்த்தப்படல் வேண்டும், (அடிப்படைத் தேவைகள் கூட‌ நிறையேற்றப்படாமல் பல பாடசாலைகள் இயங்கிக்கொண்டிக்கின்றன)

4. வடக்கு அகதிகளின் மீள்குடியேற்றம் துரிதகதியாக அனைத்துவசதிகளுடன் உத்தியோகபூர்வமாக இடம்பெற நடவடிக்கை எடுத்தல், (மீள்குடியேற்றத்திற்குத் தேவையான போதிய அத்தியவசிய, அடிப்படை வசதிகள் இன்மையால் பலர் அகதி முகாம்களிலேயே இன்னும் வாழ்ந்துவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது).

5. கிராமிய மட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபித்தல், (Small industrial hub),

6. சுற்றுச் சூழல், நாகரீகம் மற்றும் கலாச்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு நிருவனங்களை கிராமங்களில் முதலீடுசெய்வதற்கு ஊக்குவித்தல்,

7. தொழில்வாய்ப்பு, மேற்படிப்புக்குத் தேவையான வட்டியில்லா கடன் முறையை அறிமுக செய்தல்,

8. பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் முறையைமை தடுத்தல்,

9. பிரதேச மட்டத்தில் அனைத்துவசதிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு மைதானங்களை நிர்மானித்தல், (play ground / stadium with full facilities), 

10. பிரதேச மட்டத்தில் சந்தைத் தொகுதிகளை கட்டுதல், 

11. ஒவ்வொரு பிரதேசங்களையும் ஏதாவது ஒரு துறையில் அபிவிருத்தி சார்ந்த பிரதேசமாக பிரகடப்படுத்தல் வேண்டும்.

12. பிரதேச மட்டத்தில் வங்கிக் கிளைகளை திறக்க நடவடிக்கை எடுத்தல், 

13. மாவட்ட மட்டத்தில் கல்லூரிகள் / பல்கலைக்கலகங்கள் அல்லது அதன் அலகுகளை நிர்மானித்தல், (college of educations, Universities or its units)

14. புதிய தலைமுறையினர் விரும்பி வாழும் வகையில் கிராமிய உட்கட்டமைப்பு பணிகளை அவசர‌ அவசியமாக ஆரம்பிக்கவேண்டும், 

15. வருடத்தில் ஒரு பருவமாய் மழையை மட்டும் நம்பி வாழும் விவசாய்களுக்கு ஏனைய காலங்களில் வருமானம் ஈட்டும் வகையில் புதிய பயிற்சிகள், வழிகாட்டல்களை வழங்குதல், (Attracting good-paying non-agricultural jobs to the community to provide diversification and additional income opportunities),

16. விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பை முழுமையாக நம்பி வாழும் கிராமங்களுக்கு அதற்குத் தேவையான நவீன தொழில்நுற்பகளை அறிமுகம் செய்ய / கற்பிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,

17. பிரதேச மட்டத்தில் நூலம், கலாச்சார மண்டம் அடங்கிய நிலையங்களை நிர்மாணித்தல். 

18. சுகாதாரத்துறையை மேன்படுத்த அவசர நடவடிக்கை எடுத்தல், (சில பிரதேசங்களில் வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் வைத்தியர் விஞயம் செய்வது சுகாதார ரீதியாக வரிய மக்கள் பாரிய சவால்களை முகங்கொடுக்க நேரிடுகிறது).

19. கிராமிய, பிரதேச மட்டத்தில் லங்கா ஒசுசல போன்ற அரச மருந்தகங்களின் கிளைகளை நிருவி ஏழை மக்களுக்கு உதவுல்,

20. கடலுடன் இணைந்த கிராமங்களுக்கு கடற்தொழிலை மேம்ப்படுத்தும் வகையில் துறைமுகங்களை உருவாக்கள், தரமுயர்த்தல் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
மொத்தத்தில் சாதாரன மக்கள் நிம்மதியாக வாழும் மாதிரிக் கிராமங்களை கட்டியெழுப்புவதே இந்த பரிந்துரையின் முழு நோக்கமாகும்.
முசலியின் அபிவிருத்தி - யாரால், எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்...? முசலியின் அபிவிருத்தி - யாரால், எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்...? Reviewed by Vanni Express News on 12/15/2018 10:56:00 PM Rating: 5