மாவனல்லை சிலை உடைப்பு சம்பவம் - தண்டனை வழங்காவிடின் இனமோதல் ஏற்படும்

மாவனல்லை புத்தர் சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு வேண்டி ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அவ்வமைப்பின் தலைவர் புதுகல ஜீனவங்ச தேரர் இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலையை உடைப்பதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸில் பிடித்துக் கொடுக்கப்பட்ட செய்தி ஊடகங்கள் மூலம் அறியக் கிடைத்தது. இந்த இளைஞனை விடுவிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக அப்பிரதேச வாசிகளும், அப்பிரதேச பௌத்த தேரர்களும் எம்மிடம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

நாட்டில் சகவாழ்வும், நல்லிணக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை உணரப்படும் கால கட்டத்திலும், அண்மைக்காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிகழ்வுகள் என்பவற்றையும் கருத்தில் கொண்டு பொறுப்பு மிக்க சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியிலுள்ள தாங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பீர்கள் என்பது எமது நம்பிக்கையாகும்.

சிறு குழுவொன்று முன்னெடுக்கும் நடவடிக்கையினால், முழு நாட்டு இனத்தவர்கள் மத்தியிலும் மத ரீதியில் மோதல்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. இதற்கு சில வருடங்களுக்கு முன்னரும் மாவனல்லைப் பிரதேசத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெற்றது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்துகின்றோம்.

இதன்போது, புத்தர் சிலை மாத்திரமன்றி, உயிர் ஒன்றையும் இழக்க வேண்டி ஏற்பட்டது. இந்த புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது முஸ்லிம் இளைஞர் ஒருவரினால் என்பது முக்கிய விடயமாகும்.

நாட்டின் சட்டத்தை மீறுவோருக்கு வழங்கப்படும் தண்டனை இதன்பிறகு அது போன்ற செயல்களில் ஈடுபட தூண்டாதவாறு இருக்க வேண்டும்.

புத்தர் சிலை உடைப்பு நடவடிக்கை ஒரு நபரினதோ, பல நபர்களினதோ நடவடிக்கையாகவுள்ளது. இது சமூகத்துக்குள் ஏதோ ஒரு வகையில் இனங்களுக்கிடையில் மோதல் ஒன்று உருவாவதற்கு வழியமைக்கும்.

இதனைத் தடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு தாங்களும், தங்களது பாதுகாப்புப் பிரிவும் உடன் நடவடிக்கை எடுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவ்வமைப்பு விடுத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மாவனல்லை சிலை உடைப்பு சம்பவம் - தண்டனை வழங்காவிடின் இனமோதல் ஏற்படும் மாவனல்லை சிலை உடைப்பு சம்பவம் - தண்டனை வழங்காவிடின் இனமோதல் ஏற்படும் Reviewed by Vanni Express News on 12/27/2018 04:38:00 PM Rating: 5