நேற்றைய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

-முகம்மத் இக்பால் சாய்ந்தமருது 

அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இழுத்தடிக்காமல் விரைவாக நியமனங்களை வழங்குமாறு கோரி நேற்று 2018.12.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்ததுடன் முன்கூட்டியே ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்புக்களை பகிரங்கமாக அறிவித்திருந்தார்கள்.  

ஆர்ப்பாட்டத்தின்போது குறித்த சங்கத்தின் சில முக்கியஸ்தர்களை ஜனாதிபதியின் செயலாளர் அழைத்து வழக்கமான ஆறுதல் வார்த்தைகள் வழங்குவது போன்று இவர்களுக்கும் வழங்கியிருக்கின்றார்.

ஆனால் ஜனாதிபதியின் செயலாளரது வாய் மூலமான எந்தவித உத்தரவாதத்தினையும் ஏற்றுக்கொள்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துவிட்டார்கள். 

இறுதியில் வேறு வழியின்றி எழுத்துமூலமான உத்தரவாதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் வழங்கியுள்ளார். அதன்பின்பே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

கடந்த நல்லாட்சி காலத்தில் அதாவது 2௦17 ஆம் ஆண்டு கல்வியமைச்சினால் அரச பாடசாலைகளில் நிலவும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டின் மூலம் வெற்றியீட்டிய 3850 விளையாட்டு வீரர்கள் நேர்முக பரீட்சை மற்றும் செயல்முறை பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் இவ்வாண்டு ஜூலை மாதம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தது. இருந்தும், இதுவரை நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

அகிலவிறாஜ் காரியவசம் அவர்கள் கல்வியமைச்சராக இருந்த போது இது சம்பந்தமாக பல முறை கோரிக்கைகளை முன்வைத்திருந்தும் அவர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தபின்பே நியமனங்களை வழங்கமுடியும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
நேற்றைய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி நேற்றைய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி Reviewed by Vanni Express News on 12/05/2018 05:24:00 PM Rating: 5