மொழியால் ஒன்று பட்ட நாம் உள்ளத்தால் ஒன்றிணைய வேண்டும்

-ஐனுதீன், சவூதியிலிருந்து

இன்றை வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களிடம் சுயநலமான சிந்தனை கொண்ட சிறுபான்மை கட்சிகள் தங்கள் நலம் காக்க கட்டிவிடப் பட்ட கதைதான் இந்த மத நல்லிணக்கம். பொதுவாக மத நல்லிணக்கம் இலங்கையிலுள்ள நான்கு மதத் தலைவர்களிடமும் ஒரு பேசும் சொல்லாக விளங்கினாலும். அன்று தொட்டு இன்று வரை  முஸ்லிம்கள் மத்தியில் ஒரு  அடி பிசகாமல் ஒவ்வொரு வினாடியும் கடைப்பிடித்து வருகின்றார்கள் என்பதுதான் உண்மையாகும். அப்படியானால் மத நல்லிணக்கம் இங்கு எந்தத் தரப்பினர்கள் அதிகமாக பின் பற்ற வேண்டும் என்பது ஒரு கேள்வியாகின்றது.

அதாவது, சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆங்காங்கே சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரும் பான்மையான சிங்கள மக்கள் முஸ்லிம் மக்களை ஒரு காலமும் அடிமைப்படுத்தி ஆள வேண்டும் என்று நினைத்தது இல்லை. அநியாயங்கள் பல செய்தாலும் சிறு குழுக்களை விட ஏனையவர்கள் சகோதரத்துவம் பேணுவதில் பின் வாங்கியதில்லை. அரசியல்ரீதியாகவும் 21 முஸ்லிம் பாராளு மன்ற உறுப்பினர்களில் பதினொரு பேர்கள்  முஸ்லிம் கட்சி உறுப்பினர்கள் போக ஏனையவர்கள் சிங்களக் கட்சிகளிலிருந்து தெரிவான உறுப்பினர்கள்தான் அதனால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் அது நீடிப்பதில்லை என்பதால் சிங்கள முஸ்லிம் மக்களிடம் ஒரளவு மத நல்லிணக்கம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

இலங்கையின் இரண்டாவதும் மூன்றாவதும்  பெரும்பான்மைகளைக் கொண்ட மக்களின் மத நல்லிணக்கம் ஒரு மனக்கசப்பாக பகை மூண்டு கொண்டிருக்கின்றது. இன்று ஹக்கிம் அவர்கள் ரணில் அவர்கள் சம்பந்தன் அவர்களின் ஒற்றுமை  கூட மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை.  தமிழ் முஸ்லிம் மக்களிடம் அரசியல் ரீதியாக நாம் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை சென்ற 02/01/2019 ம் திகதி கிராண் பிரதேசத்தில் ஒரு  முஸ்லிம் நபரை சில தமிழ் இளைஞர்கள்  ஆடை அகற்றி கேவலப் படுத்திய  சம்பவம் காட்டி நிற்கிறது. அதனால் தமிழ் முஸ்லிம் உறவை தமிழர்களிடம் இருந்து கட்டியெழுப்பப் படவேண்டும்.

முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளினால் விரட்டியடிக்கப்பட்டவர்கள். அதனால் அன்று இழந்த பொருளாதாரங்களை இன்றும் மீட்டெடுக்க முடியாது காலத்தோடு போராடி மடிந்து கொண்டிருக்கும் நிலையில் , இறுதிப் போர் நடந்த  காலங்களில் வெளியான வடக்கு தமிழ் மக்களுக்கு அவர்கள் இழந்த  முழு வாழ்வாதாரங்களையும் வழங்கி குடியமர்த்தும் தமிழ் கூட்டணி அதே வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியமர்வுக்கு பெரும் தடையாகவுள்ளது. கிழக்கில் எங்காவது ஒரு அரச அலுவலகங்களில் ஒரு முஸ்லிம் உயர் அதிகாரி வந்தால் சில தமிழ் குழுக்களை தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தி இன விரிசல்களை ஏற்படுத்தும் தமிழ் தலைவர்கள் ஒரு போதும் இன நல்லிணக்கம் வரத் துணை நிற்க போவதில்லை.

சென்ற கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சை காங்கிரஸ் தண்டாயுத பாணிக்கு வழங்கி தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு வித்திட்டது. இன்று நீங்கள் திருகோணமலை மாவட்டத்துக்கு ஒரு முஸ்லிம் கல்வி அதிகாரி வந்ததும் போராட்டம் செய்து விரட்டியடிக்கும் நீங்களா ? மத நல்லிணக்கம் பற்றி பேசுகின்றீர்கள். இன்னும் சொல்லப் போனால் பயங்கரவாதம் தலை தூக்கிய காலங்களில் வீதி இராணுவ சோதனை முகம்களில்  முஸ்லிம்கள் எத்தனை தமிழ் பிள்ளைகளை முக்காடு போடச் சொல்லி தாயாகவும் சகோதரியாகவும் பாதுகாத்தார்கள்  அன்று, ( நான் கூட தம்பலகாமம் வீதி சோதனை முகாமில் இருந்து ஒரு நெசவு பயிற்சி ஆசிரியை பெண்ணை முக்காடு போடச்சொல்லி என் அக்காவாக அழைத்து வந்த அனுபவம் உண்டு ) நீங்கள் இன்று அந்த முக்காடை கழட்டச்சொல்லி சண்முகா வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினீர்கள். அதையும் முஸ்லிம்கள் நல்லிணக்கம் கருதி நீதி மன்றம் மூலம் வென்றெடுத்தார்கள் . காத்தாங்குடி பள்ளியில் தொழுது கொண்டிருக்கும் நிராயுதபாணியான முஸ்லிம்களை ஆயுதம் கொண்டு  சுட்டு வீழ்த்தினீர்கள்  ஆனால் அதற்கு காரணமான கருணா அம்மானை முஸ்லிம்கள் பாதுகாத்தார்கள். 1989ம் ஆண்டு ஜூலை கலவாரக் காலங்களில் பல முஸ்லிம்கள் உறங்கவும் உண்ணவும் கொடுத்து ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர்களை பாதுகாத்தது தெரியுமா? ( எங்கள் வீட்டில் தமிழ்  பெண்களை வீட்டுக்குள் உறங்க வைத்து நாங்கள் வாசலில் காவலுக்கு உறங்கிய அனுபவமும் உண்டு) இது அல்லவா மத நல்லிணக்கம்.

மேலும், முஸ்லிம்களின் கடைகளை தீ இட்டு கொழுத்தினார்கள், ஆடு மாடு பட்டிகளை அப்படியே சூறையாடினார், கல்வி மான்களை கொன்று குவித்தனர், கப்பம் என்ற போர்வையில் முதலாளி மார்களை பிச்சைக்காரனாக மாற்றினார்கள் தமிழ் புலிகள்.ஆனால் இன்றுவரையும் அந்த வலிகளை சுமக்கும் முஸ்லிம்கள் மிக பொறுமைசாளிகள். தமிழ் மக்களின் ஆரம்ப போராட்டங்களில் ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடினார்கள் புலிகளுடன். ஆனால் காலப்போக்கில் அவர்களை நீங்களே கொன்று குவித்தீர்கள் அப்போது முஸ்லிம்கள் அமைதிகாத்தார்கள். தமிழ் மக்களின் கர்த்தால்களிலும் போராட்டங்களிலும் முஸ்லிம்கள் கடையடைத்து கலந்து கொண்டு துணை புரிந்தார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் மத நல்லிணக்கம் பேணி சகோதரார்களாக வாழ எத்தனிக்கும் முஸ்லிம்களை.

இதே போல் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் தமிழ் மக்கள் இடும் பொட்டுக்கு ஒரு பிரச்சினை வந்த போது பாராளுமன்றில் காரசாரமாக குரல் எழுப்பி அதை மௌனப்படுத்தினார் அதனால் காட்டில் ஒரு பிரபாகரன் நாட்டில் ஒரு அஸ்ரப் இருவர்களையும் ஒழித்துக் கட்டவேண்டும் என்று அன்று சிங்கள அரசியல்வாதிகள் கோசம் இட்டார்கள். நீங்கள் பரீட்சை நிலையங்களில் தொப்பி அணியக் கூடாது என்று தடை விதிக்கின்றீர்கள். எப்போது ஒரு முஸ்லிம் மகனை தமிழ் மக்கள் மொழியால் ஒன்று பட்ட ஒரு சகோதரனாகே ஏற்றுக் கொள்ளுமோ அன்றுதான் மத நல்லிணக்கம் தோன்றுமே தவிரே சும்மா அரசியல் வாதிகளும் அரசியல் கட்சிகளும் பேசி எந்தப் பயனுமில்லை.

இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களுக்கு எதிராக கோசம் போடும் தமிழ் தரப்புக்கள் ஏன் அவர் ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் என்பதை ஏற்றுக் கொள்ள  மறுக்கின்றார்கள் . முதலில் தமிழ் மக்களின் மனதில் சோனிகள் என்ற துவேசமான எண்ணத்தைக் களையவேண்டும். கிழக்கில் இருந்த தமிழ் முஸ்லிம் ஒற்றுமை இல்லாது போகக்  காரணம் புலிகளாகும் . அது இப்போது நீடிக்க காரணம் தமிழ் கூட்டணியாகும். இவர்கள் முஸ்லிம் மக்களை அடக்கி ஆள வேண்டும் அவர்களை நாம் ஆயுதத்தால் மௌனித்தோம் ஆயுதம் வீழ்த்தப் பட்டதன் பின்பு அரசியலைக்கொண்டு அடிமையாக்குவோம் என்ற எண்ணக் கருவை தமிழ் சகோதரர்களின் மனதில் விதைத்து விட்டு கண்டியில் போட்டி இட்டு வென்ற ஹக்கிம் அவர்களும் சம்பந்தன் அவர்களும் நாலு சுவற்றுக்குள் பேசி முடிவெடுத்தால் அது முஸ்லிம்களின் குரலாகுமா? அல்லது அதுதான் மத நல்லிணக்கத்துக்கு துணை வருமா?

முதலில் தமிழ் கட்சிகள் தங்களது சுய நலமாக வாக்குகள் பெறும் நோக்கில் ஏதேதோ சொல்லி மக்களை குழப்பி அதில் ஆதாயம் காண ஆசைப்படும் தலைவர்களின் பேச்சுகளில் மயங்கும்  நிலையிலிருந்து வெளி வர வேண்டும். பின்னர் பள்ளிவாசல்கள் கோவில்கள் சமூக நல்லிணக்கம் விரும்பும் இரு மதத்தலைவர்கள் மூலம் நல்லதொரு சமூக உறவை ஏற்படுத்தி எதிர்காலத்தில் நாம் இரு சாரார்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற கொள்கையில் ஒன்று படவேண்டும். அப்போது வடக்கு இணைந்தா என்ன பிரிந்தால் என்ன நாம் முன்னையது போல்  அண்ணன் தம்பிகளாக வாழலாம். இந்த நிலை வந்தால் இந்த உலகத்தில் ஒரு வசந்தம் ஜொலிக்கும் மண் வடக்கும் கிழக்குமாகும்.

 நன்றி
மொழியால் ஒன்று பட்ட நாம் உள்ளத்தால் ஒன்றிணைய வேண்டும் மொழியால் ஒன்று பட்ட நாம் உள்ளத்தால் ஒன்றிணைய வேண்டும் Reviewed by Vanni Express News on 1/09/2019 11:23:00 PM Rating: 5