1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம்

-க.கிஷாந்தன்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி இன்று நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில், பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

சுமார் 1000ற்கும் மேற்பட்ட பொகவந்தலாவ கெம்பியன், லின்போர்ட், லொய்னோன், நோட்கோ, பெற்றசோ, டெவன்போட், பிரிட்லேன்ட், ஆல்டி, கொட்டியாகலை, மோரா, செல்வகந்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்திலிருந்து எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களையும் ஏந்தியவாறு பொகவந்தலாவ நகரம் வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அவ்வழியான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலயங்கள் தடைப்பட்டன.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இறுதி பேச்சுவார்த்தையாக முன்னிருத்தி ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தனர்.
1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம் Reviewed by Vanni Express News on 1/23/2019 12:37:00 PM Rating: 5