இந்திய அணியில் இடம்பிடித்த கோலி ரசிகர் சுப்மன் கில் - யார் இவர் ?

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சுப்மன் கில், கேப்டன் விராட் கோலியுடன் விளையாடவுள்ளதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளதென தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில வீரரான சுப்மன் கில், கடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டதோடு, சிறப்பாக விளையாடி ரன்களையும் சேர்த்தார். அந்தத் தொடரில் மூன்று வீரர்கள் ஜொலித்தார்கள். கேப்டனாக இருந்த பிரித்வி ஷா, மனோஜ் கல்ரா ஆகியோருடன் சுப்மன் கில்லும் பிரபலமானார்.

ஒட்டுமொத்தமாக அதிக ரன் அடித்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தார் கில். 6 போட்டிகளில் விளையாடிய அவர், 3 அரைசதம், ஒரு சதம் உட்பட 372 ரன்கள் குவித்திருந்தார். இதுதான் சுப்மன் கில்லை எல்லோருக்கும் அறியச் செய்தது. அதனால்தான், சுப்மன் கில் இந்திய அணிக்காக நியூசிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பினையும் பெற்றுத் தந்துள்ளது.

விதர்பா அணிக்கு எதிராக 2017ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணிக்காக முதன் முதலில் சுப்மன் கில் விளையாடினார். பின்னர், அதே ஆண்டு நவம்பர் மாதம், மேற்குவங்க அணிக்கு எதிராக அமிர்தசரஸில் நடைபெற்ற முதல்தரப் போட்டியில் அறிமுகமானார். கடைசியாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் இந்திய ஏ அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டியில் கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

9 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள கில், 3 சதம், 7 அரை சதங்களுடன் 1089 ரன் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில், 36இல் விளையாடி 1529 ரன் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 13 போட்டிகளில் 11 இன்னிங்சில் விளையாடி 203 ரன் அடித்துள்ளார்.

கேப்டன் விராட் கோலியின் ரசிகரான கில்லுக்கு தற்போது இந்திய அணியில் விளையாடு வாய்ப்பு கிடைத்துள்ளது. “விராட் கோலியுடன் ட்ரெஸ்சிங் ரூமில் பேசுவதை நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இப்பொழுது கனவுலகில் இருக்கிறேன். அவர் தான் என்னுடைய லட்சிய மனிதர். அவரைப் போலவே நெருக்கடிகளை எதிர்கொள்வேன். அவரிடம் இருந்து நேரடியாக கற்றுக் கொள்ளவிருக்கிறேன். விராட் கோலியின் பேட்டிங்கை யூடியூப்பில் அடிக்கடி பார்ப்பேன். நான் கற்றுக் கொண்டதை எல்லாம் பயிற்சியில் முயற்சித்துப் பார்ப்பேன்.

தற்போது நான் தொடக்கவீரராக களமிறங்கி விளையாடி வருகிறேன். மிடில் ஆர்டரில் வாய்ப்பு கொடுத்தாலும், அதிகபட்ச பலத்துடன் விளையாடுவேன். நன்றாக விளையாடினால், உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எனக்கு இந்தத் தொடர் சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்கிறார் சுப்மன் கில்.

மேலும், தன்னுடைய பேட்டிங் வளர்ச்சிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் காரணம் என்றும் புகழ்கிறார். “ராகுல் டிராவிட்டின் தாக்கம் என்னுள் அதிகமாக உள்ளது. 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் இந்திய ஏ அணிக்காக, கடந்த இரண்டு வருடங்களாக அவர் என்னுடன் இருக்கிறார். என்னுடைய பேட்டிங் திறன் குறித்து அவர் அறிந்து வைத்துள்ளார். என்னுடைய பேட்டிங் வளர்ச்சியை அவர் தான் உறுதி செய்தார்” என்றார்.
இந்திய அணியில் இடம்பிடித்த கோலி ரசிகர் சுப்மன் கில் - யார் இவர் ? இந்திய அணியில் இடம்பிடித்த கோலி ரசிகர் சுப்மன் கில் - யார் இவர் ? Reviewed by Vanni Express News on 1/14/2019 11:55:00 PM Rating: 5