கருத்து முரண்பாடுகளைக் கலைந்து கல்விக்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும் - மஸ்தான் M.P

-ஊடகப்பிரிவு

கருத்து முரண்பாடுகளைக் கலைந்து கல்விக்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும். மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் பா.உ காதர் மஸ்தான் உரை.

வடமாகாணம் கல்விக்குப் பெயர் பெற்ற ஒரு உயர்ந்த தன்னிறைவு பெற்ற மாகாணம். இன்று இலங்கையில் உயரிய பதவிகளுக்கான அடையாளச் சின்னமாக வடமாகாண கல்வியலாலர்களும் விளையாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இடைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றான விளையாட்டிலும் எமது வன்னி மண் ஏனைய மாவட்டங்களிற்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.

பள்ளி பருவத்திலே அத்திவாரம் இடப்படுகின்ற விளையாட்டு பள்ளி பருவத்திலே முற்றுப்பெற்று விடக்கூடாது. எதிர்கால சந்ததிக்கு எடுத்துக்காட்டாகவும் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவச் செல்வங்களின் ஊக்குவிப்பாகவும் இந்த விளையாட்டு அமைய வேண்டும்.இவ்வாறு முன்னாள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ காதர் மஸ்தான் தெரிவித்தார்.

இன்று துணுக்காய் வலையக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட மாங்குளம், கரிப்பட்டமுரிப்பு அ.த.க பாடசாலையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் மேலும் தெரிவிக்கையில் அனைவரும் கருத்து முரண்பாடுகளைக் கலைந்து கல்விக்காக ஒன்றினைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும். மாணவர்களின் கல்வியை முன்னேற்ற எந்த அளவுக்கு பாடுபட முடியுமோ அந்த அளவுக்கு கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் ஒன்றினைய வேண்டும் என பெற்றோர்கள் ஆகிய உங்களிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன். 

இந்த பாடசாலையில் நல்ல திறமையான நிறைய மாணவச் செல்வங்கள் இருக்கின்றனர். கல்விக்கு நீங்கள் காட்டும் அதீத ஆதரவு விளையாட்டிற்கும் வழங்கி இந்த மாணவர்களை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டாக மாற்ற வேண்டும். இது ஒரு பின்தங்கிய பாடசாலை, இந்த பாடசாலைக்கு சென்ற வருடம் என்னால் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகளும் முடிவடைந்துள்ளன. இன்னும் இந்தப் பாடசாலைக்கு நிறையவே தேவைப்பாடுகள் இருக்கின்றன. இதற்கான தீர்வையும் நான் வெகு விரைவில் பெற்றுத் தருவேன் எனவும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் திரு. சர்வேஸ்வரநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசன், பிரதேச சபை உறுப்பினர்களான திரு. சத்திய சுதர்சன் மற்றும் சத்திய சீலன் , கல்வித் திணைக்கள அதிகாரிகள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
கருத்து முரண்பாடுகளைக் கலைந்து கல்விக்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும் - மஸ்தான் M.P கருத்து முரண்பாடுகளைக் கலைந்து கல்விக்காக அனைவரும் ஒன்றினைய வேண்டும் - மஸ்தான் M.P Reviewed by Vanni Express News on 1/30/2019 05:42:00 PM Rating: 5