பெப்ரவரி மாத இறுதியில் டிரம்ப்-கிம் இடையே சந்திப்பு

பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் இடையேயான சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது. 

அதன் படி கடந்த ஆண்டு ஜூன் 12-ம் திகதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜாங் உன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது. 

எனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. 

புத்தாண்டையொட்டி வடகொரிய மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் உன், ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும் என எச்சரிக்கை விடுத்தார். 

அதே சமயம் சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிம் ஜாங் உன் அறிவித்தார். அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க தான் ஆவலுடன் இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார். 

இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப்- கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு பெப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. எனினும், இந்த சந்திப்பு எந்த இடத்தில் நடைபெறும் என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் வெள்ளை மாளிகை குறிப்பிடவில்லை.
பெப்ரவரி மாத இறுதியில் டிரம்ப்-கிம் இடையே சந்திப்பு பெப்ரவரி மாத இறுதியில் டிரம்ப்-கிம் இடையே சந்திப்பு Reviewed by Vanni Express News on 1/19/2019 10:36:00 PM Rating: 5