தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் நாளை வடக்கில் ஆரம்பம்

-ஜனாதிபதி ஊடக பிரிவு

முழு நாட்டுக்கும் சவாலாக காணப்படும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

பாடசாலை மாணவ, மாணவிகளை போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் ஜனவரி 21 முதல் 28 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை (21) முற்பகல் 9.00 மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வுடன் இணைந்ததாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வட மாகாண பாடசாலை மாணவர்கள் தமது காலைக் கூட்டத்தின்போது போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய உறுதிமொழியை மேற்கொள்ளவுள்ளனர். 

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரத்தின் முதல் நாளான ஜனவரி மாதம் 21 ஆம் திகதி போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் மாணவர்களை தெளிவுபடுத்தும் வகுப்பறை செயலமர்வுகளும் ஜனவரி 22 ஆம் திகதி பெற்றோர்களை பாடசாலைக்கு வரவழைத்து வகுப்பறைகளில் மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களும் ஜனவரி 23 ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பான சட்ட வரையறைகள் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

ஜனவரி மாதம் 24 ஆம் திகதி போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசியல் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஊடகங்களின் வாயிலாக பாடசாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான செய்திகளை கொண்டுசெல்வதற்கு ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்குபற்றலில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி சமயஸ்தாபனங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்திய 1984 கட்டணமற்ற தொலைபேசி எண்ணை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தும் நிகழ்வும் இந்த விழாவின்போது ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 11 பாடசாலைகளை புனரமைப்பதற்கான அடிப்படை செலவுக்கான நிதி வழங்கும் நிகழ்வு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான நிதியை வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகள் இதன்போது இடம்பெறவுள்ளன. 
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் நாளை வடக்கில் ஆரம்பம் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் நாளை வடக்கில் ஆரம்பம் Reviewed by Vanni Express News on 1/20/2019 11:40:00 PM Rating: 5