குப்பைமேட்டு பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

-ஜனாதிபதி ஊடக பிரிவு

கண்டி நகரில் பிரதான சுற்றாடல் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேடு தொடர்பான பிரச்சினைக்கு உடனடித் தீர்வொன்றினை வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அசம்பாவிதம் போன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொஹாகொட கழிவு முகாமைத்துவ நிலையத்தின் நடவடிக்கைகளை முறைமைப்படுத்தல் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கண்டி நகர சபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களின் குப்பைகளை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தும் கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேட்டினால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

மக்களை அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க இடமளிக்காமல் முறையான குப்பை மீள்சுழற்சி முறையொன்றின் ஊடாக அந்த குப்பைகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நகர சபை மற்றும் மாகாண சபை ஆகியன ஒன்றிணைந்து உரிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறும் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதற்கான உதவிகளை வழங்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்தார். 

மத்திய மாகாண பிரதானிகள் உள்ளிட்ட செயலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 
குப்பைமேட்டு பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு குப்பைமேட்டு பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு Reviewed by Vanni Express News on 1/03/2019 11:55:00 PM Rating: 5