நெல்லிகல தம்மரத்ன தேரரின் கருத்திற்கு (SLTJ) ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மறுப்பு

அண்மையில் மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட செய்தி அனைவரும் அறிந்த ஒன்றாகும். உண்மையில் குறித்த செயலை யார் செய்திருந்தாலும் கடும் கண்டனத்திற்குரிய செயல் என்பதுடன் குறித்த செயலில் ஈடுபட்டவர்களை விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கனவே அறிவித்திருந்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேக நபர்களின் வாக்குமூலம் பெறப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் அதிகாரிகள் செயல்பட்டுவருகிறார்கள்.

இந்த நிலையில் அண்மையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்ட  சிலரால் உருவாக்கப்பட்ட அமைப்பு (CTJ) தான் குறித்த செயலைச் செய்தது என்று SLTJ கூறியதாக நெல்லிகல தம்மரத்ன தேர் கருத்தை வெளியிட்டுள்ளதாக அவர் பேசிய காணொளியின் ஒன்றின் சிறு பகுதி பரப்பப்படுகிறது.

குறித்த தேரருக்கு இப்படியொரு கருத்தை ஒரு போதும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சொன்னதுமில்லை. குறித்த தேரருடன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எந்த வித தொடர்பும் இருந்ததுமில்லை. என்பதுதான் உண்மை. இவ்வாறிருக்க தவ்ஹீத் ஜமாஅத் அவரிடம் சொன்னதாகப் பரப்பப்படும் கருத்தை நாம் முற்றுமுழுதாக மறுக்கிறோம். அதே நேரம் குறித்த தேரர் முஸ்லிம்கள் மீது நல்லெண்ணம் வைத்துள்ளதுடன் திகனை பிரச்சினையின்போது முஸ்லிம்களுக்கு உதவிய தேரர் இவ்வாறான கருத்தைக் கூறியதாகப் பரவுவது எமக்கு வேதனை அளிக்கிறது.

தவ்ஹீத ஜமாஅத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உருவாக்கிய அமைப்புடன் எமக்குப் பல முரண்பாடுகள் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களைப் பகிரங்க விவாதத்திற்கு SLTJ சார்பாக அழைத்துள்ளோம். அவர்களால் அதைச் சந்திக்க முடியாமல் ஓட்டம் பிடித்ததை உலகம் அறிந்ததே.

எமக்குள் இருக்கும் முரண்பாடுகளைப் பகிரங்கமாகப் பேசித்தீர்த்துக் கொள்வோமே தவிர அவதூறுகளைப் பரப்பிக் காட்டிக் கொடுக்கும் அளவுக்குக் கோழைகள் அல்ல ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினர் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

உண்மையில் CTJ யினர் சிலை உடைப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் பகிரங்கமாக விமர்சித்துத் தவறான கொள்கையைத் தோலுரித்துக் காட்டியிருப்போமே தவிரத் தேரர்களிடத்தில் காட்டிக் கொடுக்கும் அளவிற்குக் கீழ்த்தரமான சிந்தனையுடையவர்கள் அல்ல தவ்ஹீத் ஜமாஅத்தினர்.

நாம் இது போன்ற செயலைச் செய்திருக்க மாட்டோம் என்று எம்மால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கே தெரிந்திருக்கும். ஆனால் தங்கள் அமைப்பை வளர்த்துக் கொள்ள இந்த அவதூறான செய்தியைப் பரப்பி மகிழ்கிறார்கள்.

உண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொன்னதாகக் குறித்த தேரர் சொல்லும்போது அவருடன் சந்திப்பில் இருந்த CTJ யினர் தவ்ஹீத் ஜமாஅத்தில் யார் சொன்னது என்று கேட்டு ஆதாரத்தை உறுதிப்படுத்தியிருக்கலாம் அதை விட்டுவிட்டு ஒரு தேரர் சொல்வதைக் கூடக் கண்மூடித்தனமாக நம்பிப் பரப்பும் அளவிற்கு இவர்கள் தரம் தாழ்ந்துவிட்டார்கள் என்பதை நினைக்கும்போது வேதனை அடைகிறோம்.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமூகத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருக்க அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.(இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 49:6

இந்த வசனத்தில் எச்சரிக்கப்பட்டதைப் பின்பற்றாத கூட்டத்தினராக CTJ யினர் மாறிவிட்டார்கள். தேரரின் கருத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள முடியாத அளவிற்குத் தரம் தாழ்ந்துள்ளார்கள்.

இது போன்ற கருத்துக்களைப் பரப்பி உங்கள் அமைப்பை வளர்க்க நினைக்கலாம். ஆனால் மறுமைக்குப் பயந்தவர்கள் உண்மை அறிந்த பின்னர் இவர்களை விட்டு ஓடிவிடுவார்கள்.

எனவே அவதூறாகக் கருத்துக்களை பரப்பி மறுமை வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ள வேண்டாம் என்று கூறிக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
M.F.M பஸீஹ் M.I.Sc
செயலாளர்,
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.
நெல்லிகல தம்மரத்ன தேரரின் கருத்திற்கு (SLTJ) ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மறுப்பு நெல்லிகல தம்மரத்ன தேரரின் கருத்திற்கு (SLTJ) ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மறுப்பு Reviewed by Vanni Express News on 1/10/2019 10:37:00 PM Rating: 5