புத்தளத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

-ரஸ்மின்

புத்தளத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இளம் பெண் ஒருவர் நேற்று (09) புத்தளம் தொகுதி போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான 32 வயதுடைய குறித்த பெண் புத்தளம் முள்ளிபுரம், மக்கள்புரம் பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் பெக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த பெண் வெளிப் பிரதேசத்தில் இருந்து ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு வந்து, சிறிய பெக்கட்களாக அடைத்து புத்தளம் பகுதியில் இவ்வாறு தொடர்ச்சியாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர். 

இந்த நிலையில், நேற்று இரவு சந்தேக நபரான குறித்த பெண், சிறிய அளவில் பொதி செய்யப்பட்ட ஹெரோயின் பெக்கட்களை விற்பனை செய்து வருவதாக புத்தளம் தொகுதி போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

புத்தளம் தொகுதி போதை தடுப்பு பிரிவினரால் இவ்வாறு சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பெக்கட்களுடன், சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
புத்தளத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது புத்தளத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது Reviewed by Vanni Express News on 2/10/2019 09:26:00 PM Rating: 5