இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா ? பகுதி - 2

- முகம்மத் இக்பால் சாய்ந்தமருது

இரண்டாவது தொடர்...........................

இன்று இருக்கின்ற இதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனோடு 2௦௦2 இல் சமாதான ஒப்பந்தமொன்றினை செய்திருந்தார்.  

குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட எந்தவொரு விடயத்தினையும் நடைமுறைப்படுத்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் முயற்சிக்கவில்லை. மாறாக தன்னுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட போராட்ட இயக்கத்தினரை பிளவு படுத்தி பலமிளக்கச் செய்யும் அரசியல் தந்திரோபாயத்தினையே கையாண்டார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த அரசியல் நகர்வுகள் நிறைவேறும் வரைக்கும் சமாதான காலம் நீண்டுகொண்டே சென்றது. இறுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து கிழக்கு தளபதி கருணா பிரிக்கப்பட்டதன் பின்பே ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியினை புலிகள் இயக்கத்தினர் புரிந்துகொண்டார்கள்.   

சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்தபோது திரு நீலன் திருச்செல்வம் அவர்களும், ஆட்சியின் பங்காளியாக இருந்த ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும் சிறுபான்மையினருக்கான அதிகாரங்களுடன் கூடிய தீர்வுப்பொதியினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.

விடுதலைப் புலிகளிகளினால் ஏற்றுக் கொள்ளப்படாத குறைந்த அதிகாரங்கள் கொண்ட அந்த தீர்வுபொதிக்கு, இதே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே. கட்சியினர் பாரிய எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, அப்பொதியின் நகல் பிரதியினை பாராளுமன்றத்துக்குள் தீயிட்டு எரித்தனர். 

ஜே.ஆர்.ஜெயவர்தனா அவர்களும், மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் தங்களது ஆட்சிகாலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலத்துடன் ஆட்சி செய்திருந்தும், குறைந்தளவு அதிகாரத்தையேனும் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்க முயற்சிக்கவில்லை. மாறாக தங்களுக்கு தேவையான அரசியல் அதிகாரத்தினை இன்னும் அதிகரித்துக் கொள்வதற்காகவே அதனை பிரயோகித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவர்கள் நினைத்திருந்தால், தமிழீழ கோரிக்கை வலுவடயமுன்பே குறைந்தளவு அதிகாரத்தினையாவது வழங்கியிருக்க முடியும். அன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

தென் பகுதிகளில் இன்று இருப்பதுபோன்று பௌத்த இனவாத கட்சிகளோ, இயக்கங்களோ அன்று இருக்கவில்லை. ஜே.ஆர். ஜயவர்தனவின் பிடிவாதப்போக்கின் காரணமாகவே தமிழ் இளைஞ்சர்கள் மத்தியில் தமிழீழ கோரிக்கை வலுவடைந்தது. அதனால் இந்நாடு பாரிய அழிவுகளை சந்தித்திருந்தது.   

இதற்கிடையில் மேற்கத்தேய நாடுகள் முன்னின்று எமது உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு சிறுபான்மயினர்களுக்கான தீர்வினை பெற்று தருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

எப்பொழுதும் பூகோள சுயநல அரசியல் சார்ந்தே சர்வதேச நாடுகளின் செயற்பாடுகள் அமைந்திருக்கும். மத்திய கிழக்கில் இஸ்ரேல் என்னும் நாட்டினை உருவாக்கியது முதல், சூடான் நாட்டிலிருந்து தென் சூடானுக்கு சுதந்திரம் வழங்கியது வரைக்குமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கத்தேய நாடுகளின் அரசியல் பொருளாதார நலன் சார்ந்தே அமைந்திருந்தது.

இன்றைய இலங்கை அரசாங்கம் மேற்கெத்தேய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதனால், இலங்கை அரசாங்கத்தினை பகைத்துக்கொண்டு இங்கு இருக்கின்ற சிறுபான்மை இனத்துக்கு உரிமையினை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் வரிந்துகட்டிக்கொண்டு முயற்சி செய்யும் தேவை அவர்களுக்கில்லை. 

சிலவேளை மஹிந்த ராஜபக்சவை போன்று மேற்கத்தைய தீவிர எதிர்ப்பு கொள்கையினை இந்த அரசாங்கமும் பின்பற்றுமேயானால், இலங்கை அரசாங்கத்தினை பணியவைக்கும் நோக்குடன் சிறுபான்மையினர்களின் பிரச்சனைகளை கையிலெடுத்திருப்பார்கள்.

அதாவது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு தங்களுக்கு சாதகமாக அரசியல் நகர்வினை மேற்கொண்டு, சிறுபான்மை இன மக்களுக்கு உரிமையினை வழங்க முற்பட்டிருக்கும். ஆனால் அந்த சூழ்நிலை இப்போதில்லை.

தொடரும்...........
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா ? பகுதி - 2 இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சிங்கள தேசத்தினால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமா ? பகுதி - 2 Reviewed by Vanni Express News on 2/25/2019 01:29:00 PM Rating: 5