உடைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அம்பாறை பள்ளிவாசலை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் ?

- முகம்மத் இக்பால் சாய்ந்தமருது

உடைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அம்பாறை பள்ளிவாசலை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் ? இதற்கு பொறுப்பு கூறுபவர்கள் யார் ?  

அம்பாறை நகரில் உள்ள பள்ளிவாசல் உடைக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இதே 27.02.2018 தினத்திலேயே கடந்த வருடம் நல்லிரவு நேரத்தில் தாக்குதல் நடாத்தி இந்நாட்டில் பாரிய இனக்கலவரம் ஆரம்பிக்கப்பட்டது.  

அம்பாறை பள்ளிவாசலை தாக்கி அழிப்பதற்கு முன்பாக அதற்கு அருகாமையில் இருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவகங்களையும், வேறு கடைகளையும், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் தாக்கி அழித்தார்கள்.

பின்பு பள்ளிவாசலுக்குள் புகுந்து சுற்றியுள்ள மதில்களையும், பள்ளிவாசலையும் சேதப்படுத்தியதுடன், எமது வேத நூலான அல்குரானையும் எரித்தார்கள்.  

பேரினவாதிகள் முஸ்லிம்கள் மீது வண்முறையை மேற்கொள்ளும்போது அதனை நியாயப்படுத்துவதற்காக ஏதாவது ஒரு காரணத்தை கூறுவது வழமை.

அந்தவகையில் அம்பாறையில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் கருத்தடை மாத்திரையை கொத்துரொட்டியில் கலந்து கொடுக்கப்பட்டதாக கூறியே தாக்குதலை ஆரம்பித்தார்கள்.  

2௦௦1 இல் நடைபெற்ற மாவனல்லை கலவரம் உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான பல அசம்பாவிதங்கள் ஹோட்டலில் இருந்தே உருவானது. அதுபோல் அம்பாறை சம்பவமும் நடந்தேறியுள்ளது.  

சம்பவம் நடைபெற்றதன் பின்பு ஏராளமான முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் தனவந்தர்களும், அதிகாரிகளும் பல தடவைகள் குறித்த பள்ளிவாசலுக்குள் படையெடுத்து பல கோணங்களில் புகைப்படம் பிடித்து அதனை தங்களது முகநூல்களில் பதிவிட்டு விளம்பரப்படுத்திக் கொண்டார்கள்.

அன்றைய விளம்பரங்களை பார்த்தபோது, எதிர்வரும் காலங்களில் அம்பாறை பள்ளிவாசல் இருந்ததையும் விட பெரியளவில் புனரமைப்பு செய்யப்படபோகின்றது என்றே அனைவரும் நம்பினார்கள். ஆனால் நடந்தது என்ன ?

ஒரு வருடமாகியும் ஆகக்குறைந்தது பள்ளிவாசலை சுற்றியிருக்கின்ற மதில்களாவது கட்டப்படவில்லை.  

பள்ளிவாசலை புனரமைப்பு செய்வதற்கு பேரினவாதிகள் தடுக்கின்றார்களா ? அவ்வாறு தடுத்தால் அதனை பகிரங்கமாக கூறலாமே ! அல்லது பணம் ஒதுக்கீடு செய்யப்படவில்லையா ? ஏன் ஒதுக்கீடு செய்யப்படவில்லை ?

பணம் ஒதுக்கீடு செய்தால் அப்பிரதேசத்து வாக்குகளை கவர்வதற்கு அங்கே ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் இல்லை என்ற காரணமா ?

தேர்தல் காலங்களில் தாங்கள் வெற்றி பெறுவதற்காக கோடிக்கணக்கில் பணத்தினை அள்ளி வீசுகின்ற இம்மாவட்ட அரசியல்வாதிகள், இதற்காக மட்டும் ஏன் அரச பணத்தை மட்டும் எதிர்பார்க்க வேண்டும் ?   

அம்பாறை என்பது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டத்தின் தலைநகரமாகும். இங்கேதான் அதிகமான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதோடு, வேறு பல மட்டத்திலான அரசியல் அதிகாரமும் உள்ளது.  

அத்துடன் குறிப்பிடத்தக்க பணம் படைத்த பண முதலைகளும் இந்த மாவட்டத்தில் இருக்கின்றார்கள்.

வாக்காளர்களை கவர்வதற்காக தங்களது ஊர்களில் அல்லது வாக்குகள் பெறக்கூடிய பிரதேசங்களில் அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு அதற்காக விழா எடுப்பதெற்கென்று ஏராளமான பணத்தினை வீண்விரயம் செய்ய முடியுமென்றால், அதில் சிறு பகுதியையாவது இந்த பள்ளிவாசல் புனரமைப்புக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்க முடியாதா ?

அரசியல்வாதிகள் வாக்குகளை மைய்யமாக வைத்தே அனைத்தும் செய்வார்கள் என்பது தெரிந்த விடயம். ஆனால் பணம் படைத்த பல தனவந்தர்களும் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதும் கவலையான விடயமாகும். 
உடைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அம்பாறை பள்ளிவாசலை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் ? உடைக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அம்பாறை பள்ளிவாசலை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் ? Reviewed by Vanni Express News on 2/27/2019 04:16:00 PM Rating: 5