கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு என் திறந்த மடல் - சவூதியிலிருந்து ஐனுதீன்

 -சவூதியிலிருந்து ஐனுதீன்.

பசியில் வாடிய தன்  குடும்பத்திற்கு ஒரு வேளையாவது சோறு கொடுப்போம் என்ற எண்ணத்தில் ஆயிரம் ரூபாய் கூலிக்கு மண் அள்ளிக் கொடுக்கப் போனவர்கள் கடல் படையினர்களின் கெடு பிடியால் ஆற்றில்  குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட மிக கொடுமையான சம்பவம் கிழக்கு கிண்ணியாவில் நடந்து இன்று மூன்று  நாட்கள் நகர்ந்து விட்டது.

உயிரிழந்த ஒரு சகோதரன் வாலிபன் அவரின் வீட்டில் இன்னும்  அழுகுரல் தெரு முழுக்க கேட்டவண்ணமிருக்க  மற்றைய சகோதரன் திருமணமானவர் அவர் மனைவி அழுதழுது சிவந்து போன விழிகளுடன் வாடிக்கருகிய மலர் மண்ணில் சறுகாய் மடிந்தது போல் இஸ்லாமிய முறைப்படி நாலு சுவற்றுக்குள் இத்தா எனும் புனித கடமையினை நிறை வேற்றிக் கொண்டிருக்கின்றாள்.

எல்லாப் பேச்சும் எழுத்தும் மூன்று நாட்கள்  உயிரோட்டமாக உலா வரும் சமூகவலைத் தளங்களில் பின் அதை மறந்து இன்னொன்று அந்த இடத்தை  ஆட்கொண்டு விடுவது போல் இன்று மறந்து விட்டது சமூகமும் சமூக வலைத் தளங்களும் அந்த துக்ககரமான துயரத்தை என்று சொல்லலாம்.

ஆளுநராகவும் ஒரு மனிதாபிமான எண்ணத்திலும் நீங்கள் மரணித்தவர்களின் இரு வீட்டுக்கும் வந்து அவர்களின் துக்கத்தில் பங்கெடுத்தது எமக்கு இன்னும் மனிதம் இந்த மண்ணில் மரணிக்க வில்லை என்பதை எடுத்து காட்டுகிறது. அன்று வந்த உங்களின் முகத்தை நாம் காணும் போது உங்களின்  சகோதரர்களை இழந்தது போல் முகத்தில் ஒரு உணர்வோடு நின்றதை என்னால் காணமுடிந்தது. நன்றி ஆளுநர் அவர்களே!

மேலும், மரணித்த குடும்பங்களின் ஈமைக்கிரிகைகளுக்காக  நீங்கள் தலா 50 ஆயிரம் வழங்கி வறுமையில் வாடிய குடும்பத்தின் உள்ளத்தை குளுமை படுத்தியதும் உங்களின்  பெருந்தன்மையினை காட்டுகிறது. இந்த இடத்தில் எம் மக்கள் வாக்களித்து வாழ வைத்த மூன்று எம்பிகளையும் குறை கூறி எந்த பழனும் கிடைக்கப் போவதும் இல்லை அந்த மூவர்களும் கடந்து வந்த பாதைகள் எமக்கு அவர்களின் நற்பணிகளை கோடிட்டுக் காட்டும் அதனால் அவர்களை இதில் எழுதி எமது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.

ஆதலால், ஆளுநராகிய உங்களிடம்  நான் இன்னும் ஒரு விண்ணப்பத்தை முன் வைக்க விரும்புகின்றேன். அதாவது மரணித்த சகோதரர்களின் இரு குடும்பங்களின் வறுமை நிலையை நீங்கள் நேரில் கண்டவர் அந்த மரணித்தவரின் மனைவியின் ஆசைகள் நிராசை ஆகக்கூடாது அவரின் வாழ்க்கை எதிர்காலங்களில் சீரழியக் கூடாது மீண்டும் இந்த சமூகத்தில் அவள் 
குறைகாணாது வாழ வேண்டும். அதனால் அவள் தகுதிக்கு ஏற்றாப்போல் அரசாங்க காரியாலயங்களில் ஏதாவது ஒன்றில் லேபர் வேலையாவது கொடுங்கள் இந்த உதவி உங்கள் மறுமை வாழ்க்கையினை சுவனப் பூஞ்சோலை வனமாக பிரகாசிக்க உதவும்.

அதே போல் மகனை இழந்த மற்ற குடும்பத்தின் தாய் தந்தைகளின் கண்ணீரை துடைக்க அன்று மூதூர் றிசானா அவர்கள் சவூதியில் மரணித்ததினால் அவர் சகோதரனுக்கு  அரச வேலை வழங்கியது போல் இந்தக் குடும்பத்தில் அவர்களின் தகுதிக்கு ஏற்ற ஏதாவது ஒரு வேலை ஒருவருக்கு வழங்கி அந்த குடும்பத்தின் பசி  பட்டினி துடைக்க உதவுங்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

நன்றி,
கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு என் திறந்த மடல் - சவூதியிலிருந்து ஐனுதீன் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு என் திறந்த மடல் - சவூதியிலிருந்து ஐனுதீன் Reviewed by Vanni Express News on 2/04/2019 12:57:00 AM Rating: 5