பலஸ்தீனர்களுக்கு மஹாதிர் மொஹமட்டின் உறுதி மிக்க ஆதரவு

-Latheef Farook

அமெரிக்க இஸ்ரேல் நிகழ்சி நிரலில் பணிபுரியும் அரபு கொடுங்கோலர்கள் வெற்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.

பலஸ்தீன மக்களைக் கைவிட்டு விட்டு அரபுக் கொடுங்கோலர்கள் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் இணைந்து அவர்களது தீய நிகழ்ச்சி நிரலை அந்தப் பிராந்தியத்தில் அரங்கேற்றி வரும் வேளையில் தெற்காசியப் பிராந்தியத்தில் இருந்து தனியான ஒரு குரலாக ஆனால் செல்வாக்கு மிக்க ஒரு குரலாக மலேஷியப் பிரதம மந்திரி மஹாதிர் மொஹமட்டின் குரல் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. பலஸ்தீன மக்களுக்காகவும் அவர்கள் நடத்தி வரும் சுதந்திரப் போராட்டத்தக்கு அதரவாகவும் அவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான குரலாகவும் அவரின் குரல் மலேஷிய அரசின் சார்பில் அந்த நாட்டு மக்களின் சார்பில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பலத்த ஆதரவோடு இஸ்ரேல் பலஸ்தீன மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

2019 ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை மலேஷிய நகரான குச்சிங்கில் 70 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான நீச்சல் வீரர்கள் ஒன்று கூட உள்ளனர். 2020 டோக்கியோ பரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தகுதிகான் தேர்வாக இது அமையவுள்ளது.

இந்த நிகழ்வில் இஸ்ரேலிய வீரர்கள் கலந்து கொள்வதற்கு மலேஷியப் பிரதமர் தடை விதித்துள்ளார். ‘இஸ்ரேலியர்களுக்கு மலேஷியாவில் இடம் இல்லை. அவர்கள் இந்த நாட்டுக்குள் பிரவேசிக்க நாம் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இங்கு வருகை தந்தால் அது ஒரு குற்றம். அவர்களுக்கு விஸா வழங்குவது மலேஷியாவின் கொள்கைகளுக்கு எதிரானது காரணம் மலேஷியா பலஸ்தீனர்களை ஆதரிக்கும் ஒரு நாடு. இஸ்ரேலுடன் எமக்கு எவ்வித ராஜதந்திர தொடர்புகளும் கிடையாது. அவர்களை ஒரு தேசமாகவும் நாம் அங்கீகரிக்கவில்லை’ என்று மலேஷிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய வீரர்களுக்கு தடை விதிக்கும் மலேஷிய அரசின் முடிவை அந்த நாட்டைச் சேர்ந்த 29 அரச சார்பற்ற அமைப்புக்கள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான தார்மீக ரீதியான கோபத்தை வெளிப்படுத்த அந்த நாட்டை தனிமைப்படுத்துவதும் அவர்களுக்கு எதிராக தடைகளைக் கொண்டு வருவதும் ஒரு குறைந்த பட்ச மூலோபாயமாக இருக்கும். தென் ஆபிரிக்காவில் நிலவிய இனவாதத்துக்கு எதிராக இவ்வாறான முறைகள் தான் கையாளப்பட்டன. தென் ஆபிரிக்கா மீது அது சாத்தியமாகிய போது ஏன் இஸ்ரேலுக்கு அது சாத்தியப்படாது என்று இந்தக் குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலை இந்த நாட்டுக்குள் பிரவேசிக்க விடாமல் மலேஷிய அரசு சரியான காரியத்தையே புரிந்துள்ளது என்றும் அந்தக் குழு சுட்டிக்காட்டி உள்ளது.

விளையாட்டையும் அரசியலையும் கலக்கக் கூடாது என்று யாரும் மடத்தனமாக உளறுவதற்கு முன் அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையின் படி 241 பலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 42 பேர் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள். ஐந்து பேர் பெண்கள். மூவர் துணை மருத்துவப் பிரிவினர். இருவர் ஊடகவியலாளர்கள். இன்னும் 26140 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேலின் குறிபார்த்து சுடும் படைப்பிரிவால் மறைந்திருந்து சுட்டுத் தள்ளப்பட்டவர்கள் என்று இந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கையில் நினைவூட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் பற்றி அமெரிக்க பிரஜையான ஜேம்ஸ் பென்டன்ஐஐஐ என்பவர் தனது டுவிட்டர் குறிப்பில் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு. துரோகங்களில் இருந்தும் விமர்சனங்களில் இருந்தும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு விடுபாட்டுரிமை வழங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு எதிரான துரோகமாகும். எமக்கு சிவில் உரிமைகள் உள்ளன. அதை அவர்கள் பறித்துச் செல்லும் வரையில் நாம் பாதுகாக்கலாம். இஸ்ரேலுக்கு எதிராக துணிச்சலாக எழுந்து நின்றமைக்காக மலேஷியாவுக்கு நாம் மிகப் பெரிய நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

டொக்டர் மஹாதிரின் முடிவு பற்றி கருத்து வெளியிட்ட பலஸ்தீன் குரோனிக்கல் இதழின் ஆசிரியரும் மலாயா பல்கலைக்கழகத்தச் சேர்ந்தவருமான யூசுப் அல்ஜமால் :

தொடர்ச்சியான காலணித்துவம், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் இன்னோரன்ன பாரபட்சங்களால் 100 ஆண்டுகளுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டு பலஸ்தீன மக்களுக்கு வரலாற்று ரீதியாக ஆதரவு தெரிவிக்கும் ஒரு நாடாக மலேஷியா உள்ளது. பலஸ்தீன மக்களிடமும் மலேஷிய மக்களிடமும் காணப்படுகின்ற இஸ்லாமிய பெறுமானங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் எப்போதுமே பிரதான இடம் பிடித்து வந்துள்ளன.

2015ல் மலேஷியாவில் மலாயா பல்கலைக்கழகத்தில்; இடம்பெற்ற ஒரு நிகழ்வில் முதல் தடவையாக பகிஷ்கரிப்புக்களை ஒரு முக்கிய அரசியல் கருவியாகப் பாவிப்பது பற்றி ஆராயப்பட்டது. மாற்றங்களை ஏற்படுத்த பகிஷ்கரிபபுக்களை பயன்படுத்துவது பற்றி இங்கு விரிவான ஆழமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு முன்னர் டொக்டர்.மஹாதிர் மேற்கு ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அவுஸ்திரேலிய அரசின் அறிவிப்பை வன்மையாகச் சாடி இருந்தார். பலஸ்தீனர்களும் அவர்களின் தாயகக் கனவும் இதன் மூலம் அவமானப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜெரூஸலம் இப்போது இருக்கின்ற நிலையிலேயே இருக்க வேண்டுமே தவிர அது இஸ்ரேலின் தலைகராக மாறக் கூடாது என்ற தனது கருத்தையும் அவர் ஆழமாக முன்வைத்திருந்தார்.

அவுஸ்திரேலிய பிரதமரின் கருத்துக்கு நேர் மாற்றமான மலேஷியப் பிரதமரின் கருத்து அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு ஆசிய நேச நாடுகள் மத்தியில் ஓரளவு எதிர் அலையை ஏற்படுத்தி இருந்தன.

ஜெரூஸலம் இப்போது இருக்கின்ற நிலையிலேயே இருக்க வேண்டுமே தவிர அது இஸ்ரேலின் தலைகராக மாறக் கூடாது என்பதன் மூலம் ஜெரூஸலம் எப்போதும் பலஸ்தீனர்கள் வசம் தான் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏன் அவர்கள் தமக்கு சொந்தமில்லாத ஒரு இடத்தை பிரிப்பதற்கு முயல வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தி உள்ளார்.

எவ்வாறேனும் அரபுக் கொடுங்கோலர்களின் அரசியல் வங்குரோத்து நிலையை பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்க சவூதி கைக் கூலியான, தனது சொந்த நாட்டு மக்களான பெரும்பான்மை ஷீஆ சமூகத்தை அடக்கி ஆண்டு நசுக்கி வரும் பஹ்ரேன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மேற்கு ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய அரசின் நிபை;பாட்டை நியாயப்படுத்தி உள்ளார்.

2018 செப்டம்பர் 28ல் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73வது அமர்வில் உரை நிகழ்த்திய மஹாதிர் மொஹமட் அங்கும் பலஸ்தீன விடயம் பற்றி பிரஸ்தாபித்தார். இஸ்ரேலின் கைப்பொம்மையாக இருக்கும் பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உற்பட எந்தவொரு அரபுத் தலைவருக்கும் இந்த அமர்வில் பலஸ்தீன விடயம் பற்றி பேசும் திராணியும் துணிச்சலும் இருக்கவில்லை.

இஸ்ரேலின் இன்றைய அடாவடித் தனங்களுக்கு மூல காரணமாக அமைந்தது 1948ல் இந்த நாட்டை ஸ்தாபிப்பதற்காக பலஸ்தீன பூமியை அபகரித்தமையாகும். பலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். எஞ்சியுள்ளவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களது வீடுகளும் பண்ணைகளும் கபளீகரம் செய்யப்பட்டன.

தம்மீது அனுதாபம் கொண்ட அண்டை நாடுகளின் உதவியோடு அவர்கள் மரபு ரீதியான ஒரு யுத்தத்தை தொடுக்க முயன்றனர். ஆனால் இஸ்ரேலின் நண்பர்களால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதன் விளைவாக மேலும் பல பலஸ்தீனக் காணிகள் பறிக்கப்பட்டன. அவ்வாறு பறிக்கப்பட்ட காணிகளில் இஸ்ரேலிய குடியிருப்புக்கள் பல நிர்மாணிக்கப்பட்டன. இந்த இடங்களில் பலஸ்தீனர்கள் பிரவேசிக்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனர்கள் முதலில் கற்களையும் கையில் கிடைத்தவற்றையும் கொண்டு போராடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு ஜீவ ரவைகளைக் கொண்டு பதில் அளிக்கப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டார்கள். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். மரபு ரீதியான யுத்தம் ஒன்றை தொடுக்க முடியாமல் அதிருப்தியும் விரக்தியும் அடைந்த பலஸ்தீனர்கள் வேறு வழியின்றி பயங்கரவாதத்தை தெரிவு செய்யும் நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் அப்பட்டமாக மீறிய போதும் உலகம் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. பலஸ்தீன மக்களுக்கான உணவு, மருந்துப் பொருள்கள் உற்பட ஏனைய அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் சர்வதேச கடல் பரப்பில் வழிமறிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. பலஸ்தீனர்களும் தங்களுக்கு கிடைத்த ராக்கெட்டுக்களை ஏவினர். ஆனால் அவை தாக்கம் செலுத்தவில்லை. யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக மிகவும் பலம் பொருந்திய விதத்தில் பழிவாங்கல்களை இஸ்ரேல் மேற்கொண்டது. பலஸ்தீன மக்களின் பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் ஏனைய கட்டிடங்கள் என எல்லாமே தரைமட்டமாக்கப்பட்டன. அப்பாவி மக்கள் ஆண் பெண் சிறுவர் என எந்தப் பேதமும் இன்றி மீண்டும் மீண்டும் கொல்லப்பட்டனர்.

உலகம் இஸ்ரேலுக்கு வெகுமதிகளைக் கொடுத்தது. ஜெரூஸலத்தை அதன் தலைநகராக ஏற்றுக் கொண்டு பலஸ்தீன மக்களுக்கு மேலும் ஆத்திரமூட்டியது. பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட ஆத்திரமும் விரக்தியும் தான் அவர்களை இன்று நாம் பயங்கரவாதமாகப் பார்க்கும் காரியங்களில் ஈடுபட வைத்துள்ளது. ஆனால் மக்களை அளவு கடந்த அச்சத்துக்குள்ளாக்கும் காரியங்களும் பயங்கரவாதம் தான் என்பதை உலகம் புரிந்து கொள்ள மறுத்துள்ளது. அரசாங்கங்களால் மக்களை நோக்கி குண்டுகள் வீசுவதும் ராக்கெட்டுக்கள் ஏவுவதும் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும் ஏன் பயங்கரவாதம் ஆக முடியாது. ஏன் அவற்றை நாம் பயங்கரவாதம் என்று சொல்வதில்லை.

மலேஷியா பயங்கரவாதத்தை எதிர்க்கின்றது. பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் போராடுவோம். ஆனால் பயங்கரவாதத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டு அது களையப்பட வேண்டும். அப்போதுதான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். பலஸ்தீனர்கள் மீண்டும் தமது சொந்தக் காணிகளுக்கு உரிமை கோரி அவர்களது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பி வரட்டும். அவர்கள் தமக்கென ஒரு பலஸ்தீன அரசை உருவாக்கட்டும். அங்கு நீதியும் சட்டத்தின் ஆட்சியும் நிலைக்கட்டும். அவர்களுக்கு எச்சரிக்கைகளை விடுப்பது பயங்கரவாதத்தை நிறுத்தாது. அவர்களுக்கு தொடர்ந்து அச்சமூட்டுவதும் ஒருபோதும் வெற்றி அளிக்காது.

ஓன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை என்பது முன்னர் இருந்த லீக் ஒப் நேஷன் போலவே தேசங்களுக்கு இடையில் யுத்தங்களை இல்லாமல் ஆக்குவதற்கான ஒரு உன்னதமான நோக்கில் உருவாக்கப்பட்டது. மக்களைக் கொன்று குவிக்கவே யுத்தங்கள் நடைபெறுகின்றன. நவீன யுத்தங்கள் இந்த மனிதப் படுகொலைகளை மிகப் பாரிய அளவில் செய்து ஒட்டு மொத்த அழிவை பரவலாக ஏற்படுத்துகின்றன. எந்தக் காரணத்துக்காகவும் கொலைகளை ஆதரிக்க முடியாது என்பதே நாகரிகம் அடைந்த தேசங்களின் உரிமை கோரல். ஒரு மனிதன் கொலை செய்தால் அவன் ஒரு குற்றத்தைப் புரிந்தவன் ஆகின்றான். இந்தக் கொலைக்கான தண்டனையும் மரணமே என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இதேவேளை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாம் மீதும் மேற்குலகம் கொண்டுள்ள வக்கிரத்தனமான வெறுப்புணர்வு சர்வதேச ஊடகங்கள் வாயிலாகவும் பிரதிபலித்தது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த யுவதி றஆப் மொஹம்மத் அல் குனுன் தனது குடும்பத்தை விட்டு ஓடி வந்த போது சர்வதேச ரீதியாக ஊடகங்கள் வாயிலாக அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் இந்த விடயத்தில் மிக அண்மைக்கால உதாரணமாகக் காணப்படுகின்றது.

தனது குடும்பத்தை விட்டுவிட்டு தப்பி ஓடிவந்த அல் குனுனுக்கு கனடா புகலிடம் அளித்துள்ளது. ஒன்டாரியோ விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிறீலேண்ட் வரவேற்றுள்ளார்.

சவூதி அரேபியாவில் ஒரு கௌரவமான சூழலில் கௌரவமான குடும்பப் பின்னணியில் வளர்ந்த ஒரு இளம் பெண் தனது சமயத்தை கைவிடத் துணிவதென்பது நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒன்று. அவர் தனது கௌரவமான ஆடையைக் கலைந்துவிட்டு அரை நிர்வாண கோலத்துக்கு மாறுவது. உணவு மற்றும் பானங்களின் முறைகளை மாற்றிக் கொள்வது எல்லாமே விந்தையானவை. ஆனால் இஸ்லாத்தால் தடுக்கப்பட்டுள்ள விடயங்களைத் தான் விடுதலை என்ற பெயரிலும் சுதந்திரம் என்ற பெயரிலும் மேலைத்தேச மற்றும் இஸ்ரேலிய யுத்த வெறியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஊடகங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.

யூத – கிறிஸ்தவ மேற்குலகின் விழுமிய வங்குரோத்து நிலை இதுதான்.

அந்த யுவதி சவூதி அரேபியாவில் மோசமாக நடத்தப்பட்டிருந்தால் அது இஸ்லாத்தின் தவறல்ல. அது அடக்குமுறை ஆட்சி நிலவும் சவூதி அரேபியாவின் தவறாகும். இஸ்லாம் சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான சுதந்திரத்தை அளித்துள்ளது. இன்றைய மேற்குலக பெண்களால் அன்று இந்த சுதந்தரத்தை கனவில் கூட கண்டிருக்க முடியாது.

அடக்குமுறையான, காட்டுமிராண்டித்தனமான ஒரு ஆட்சி முறையில் இருந்து விடுபடவே அந்தப் பெண் விரும்பினார் என்பதை மேற்குலக ஊடகங்கள் கோடிட்டுக் காட்டத் தவறி விட்டன. இந்த ஆட்சியை அதிகாரத்தில் அமர வைத்தவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள். அவர்களை இன்று வரைப் பாதுகாத்து வருபவர்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரமாணம் செய்துள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும்.

எவ்வாறாயினும் கனடா அதிகாரிகளின் நகர்வானது ஒரு அரசியல் கலந்த விடயமாக சில டுவிட்டர் குறிப்புக்களில் நோக்கப்பட்டுள்ளன. புரட்சி செய்துள்ளதாக நம்பும் இந்த இளம் பெண் சில பெண்களாலும் கண்டிக்கப்பட்டுள்ளார். ஏனைய பல ஐரோப்பிய நாடுகளைப் போலன்றி சவூதி அரேபியாவில் இளவரசிகள் போல் தாங்கள் வாழ்வதாகவும் அந்தப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சவூதி அரேபியா பெண்களுக்கும் கனடா பெண்களுக்கும் இடையிலான வித்தியசங்களை விளக்கும் வகையிலான புகைப்படங்களும் கூட வெளியிடப்பட்டுள்ளன. ஒரு நல்ல சவூதி அரேபிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண் எப்போதும் மற்றவர்களின் உதவி தேவைப்படும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவதில்லை என்ற ரீதியிலும் சிலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா இஸ்ரேல் என்பன இணைந்து தமது நாசகார அரபு பங்காளிகளுடன் கைகோர்த்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக 65 லட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் அவர்கள் உள்ளனர். இதைப் பற்றி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாதவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக குடும்பத்தை விட்டுபி பிரிந்து வந்த ஒரு யுவதியை தலைக்கு மேல் வைத்து கொண்டாடத் தெடங்கி உள்ளனர்.

இதே யூத கிறிஸ்தவ மேற்குலகத்தவர்கள்; தான் முஸ்லிம்களை இஸ்லாத்தில் இருந்து விலக்கி வைப்பதற்கான தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. மத்திய கிழக்கில் இந்தப் பணி அந்த நாடுகளின் கொடுமைக்கார அரசுகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாகத் தான் இந்த இஸ்லாமிய விரோத சக்திகள் தங்களது முழு ஆதரவையும் அந்த ஆட்சியாளர்களுக்கு வழங்கி அவர்களைக் காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் தான் தங்களை மனித உரிமை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றின் காவலர்களாகவும் உரிமை கோரி வருகின்றனர்.

றஆப் கனுன் இஸ்லாத்தை விட்டு விலகியதுஇஸ்லாத்தில் தவறுகள் உள்ள காரணத்தால் அல்லமாறாக அது அவருக்கு போதிக்கப்பட்ட விதமே காரணம்றஆப் தனது குடும்பத்தை விட்டு விலகியதுஅவர்கள் மீது கொண்ட வெறுப்பினால் அல்லமாறாக அவர் பராமரிக்கப்பட்ட விதத்தால்அவர் தனது சொந்த ஊரை விட்டு விலகியதுஅதை அவர் விரும்பவில்லை என்பதற்காக அல்லஅது அவர் தனது பாதுகாப்பில் கொண்ட கரிசணையால்எனவே இஸ்லாத்தின் பிடியில் இருந்து அவர் வெளியேற இன்னும் பலர் காரணம்இது பலரின் கண்களைத் திறந்து விட்டுள்ளதுஎதுவுமே செய்யமால் எல்லாவற்றுக்கும் மேலாகசுய பெருமைளை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் பலரின்கண்களை இது திறந்து விட்டுள்ளது
பலஸ்தீனர்களுக்கு மஹாதிர் மொஹமட்டின் உறுதி மிக்க ஆதரவு பலஸ்தீனர்களுக்கு மஹாதிர் மொஹமட்டின் உறுதி மிக்க ஆதரவு Reviewed by Vanni Express News on 2/03/2019 03:54:00 PM Rating: 5