கிறிஸ் கெய்ல் 162 ரன் விளாசியும் வீண் - 24 சிக்சர் அடித்து சாதித்த இங்கிலாந்து

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 24 சிக்சர் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் இப்போது நடந்து வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடந்த முதலாவது போட்டியில், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஹெட்மையரின் சதத்தால் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் இருந்தன. இந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி, செயின்ட்ஜார்ஜில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் சிறப்பான ஸ்கோர் இது. கேப்டன் மோர் கன் 88 பந்தில் 6 சிக்சர், 8 பவுண்டரியுடன் 103 ரன், விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் 12 சிக்சர், 13 பவுண்டரியுடன் 150 ரன், அலெக்ஸ் ஹாலெஸ் 82 ரன் எடுத்தனர்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து தரப்பில் மொத்தம் 24 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அடிக்கப் பட்ட அதிகபட்ச சிக்சர் இது. இதற்கு முன்பு இதே தொடரில் முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 23 சிக்சர் அடித்தது சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ளது இங்கிலாந்து அணி.

பின், 419 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப் படுத்தியது. ஒரு பக்கம் கிறிஸ் கெய்ல் வெளுத்து வாங்கினாலும் அவருக்குத் துணையாக யாரும் நிலைத்து நிற்காததால் அந்த அணி, 48 ஓவர்களில் 389 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

32 பந்தில் அரை சதம் அடித்த கெய்ல், 55 பந்தில் சதமும் 85 பந்தில் 150 ரன்னும் விளாசினார். அவர் 97 பந்துகளில் 14 சிக்சர், 11 பவுண்டரியுடன் 162 ரன் விளாசினார். டேரன் பிராவோ 61 ரன்னும் பிராத்வெயிட் 50 ரன்னும் நர்ஸ் 43 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 5 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜாஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதையடுத்து இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
கிறிஸ் கெய்ல் 162 ரன் விளாசியும் வீண் - 24 சிக்சர் அடித்து சாதித்த இங்கிலாந்து கிறிஸ் கெய்ல் 162 ரன் விளாசியும் வீண் - 24 சிக்சர் அடித்து சாதித்த இங்கிலாந்து Reviewed by Vanni Express News on 2/28/2019 04:31:00 PM Rating: 5