அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை - மஹிந்த தேசப்பிரிய

அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையே தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களால் தேர்தல்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான காரணம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசியல்வாதிகள் மீது மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. முக்கியமாக அரசியல் வாதிகள் மீதான மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருகின்றது. 

மக்கள் நினைக்கின்றார்கள் தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று. மக்களாகிய நாங்கள் எதுவும் பேசக்கூடாது என்று நினைக்கின்றார்கள். 

மக்களின் இவ்வாறான எண்ணம் சரியானதல்ல. மக்கள் தெரிவு செய்யும் அரசியல்வாதிகள் மக்களின் ஆணைப்படி நடந்து கொள்ளாவிட்டால் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க வேண்டும். இந்த நிலை வரவேண்டும். 

இந்த நிலை மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்கும் நிலை வந்தால்தான் மக்களிடத்தில் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை உருவாகும். 

தேர்தலில் விரும்பாதவர்களை தெரிவு செய்வதற்கு இந்தியாவில் ஒரு முறை உள்ளது. குறிப்பாக தேர்தல் வாக்குச் சீட்டில் உள்ளவர்கள் எவரையும் விரும்பவில்லை என்று பதிவிடுவதற்கு ஒரு தெரிவு உள்ளது. இந்த முறை எமக்கு தேவையா? என்று நாங்கள் இங்கு கூறவில்லை. 

ஆனால் மக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் பெறுமதியை தெரிந்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் வாக்களிப்பு வீதம் குறைவடையாது என்று எதிர்பார்க்கின்றோம் என்றார். 
அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை - மஹிந்த தேசப்பிரிய அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை - மஹிந்த தேசப்பிரிய Reviewed by Vanni Express News on 2/26/2019 11:45:00 PM Rating: 5