சீன அரசாங்க திட்டத்தில் ஏறாவூர் வைத்தியசாலை உள்ளீர்ப்பு

- அஸ்லம் மௌலானா, முஹம்மட் அஸ்மி

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளை அனைத்து வசதிகளுடனும் நவீனமயப்படுத்தி, மேம்படுத்தும் பொருட்டு சீனா அரசாங்கத்தின் 85 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள திட்டத்தில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை உள்ளீர்க்கப்பட்டுள்ளது..

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா விடுத்த வேண்டுகோளையேற்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். 

இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள 13 வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவை நவீன வசதிகள் கொண்டவையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இது விடயமாக சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா கலந்துரையாடினார்.

இத்திட்டம் தொடர்பான கள ஆய்வுகளுக்காக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு ஒன்றினை அடுத்த வாரமளவில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதாகவும் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஜூலை மாதம் தனது தலைமையில் ஆரம்பித்து வைப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தன்னிடம் உறுதியளித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.

இத்திட்டத்தின் பிரகாரம் ஏறாவூர் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக் தொகுதி, விடுதிகள்,  மகப்பேற்றுப் பிரிவு, மருந்துக் களஞ்சியம், தொற்றா நோய்ப் பிரிவு, இரத்த சுத்திகரிப்பு மத்திய நிலையம், ஆய்வு கூடம், சத்திர சிகிச்சை கூடம், அவசர சிகிச்சைப் பிரிவு என்பன அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளதுடன் 30 மில்லியன் டொலர் பெறுமதியான நவீன வைத்திய உபகரணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏறாவூர் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் தான் மேற்கொண்டு வருகின்ற முன்னெடுப்புகளுக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார் எனவும் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.
சீன அரசாங்க திட்டத்தில் ஏறாவூர் வைத்தியசாலை உள்ளீர்ப்பு சீன அரசாங்க திட்டத்தில் ஏறாவூர் வைத்தியசாலை உள்ளீர்ப்பு Reviewed by Vanni Express News on 2/07/2019 04:58:00 PM Rating: 5