போலி செய்தியை கண்டறிய 5 நிறுவனங்களை பணியமர்த்திய ஃபேஸ்புக்

இந்தியாவில் போலி செய்திகள் பதிவிடப்படுவதைத் தவிர்க்க கூடுதலாக 5 நிறுவனங்களை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பணிக்கு அமர்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் என்பது ஏதோ ஒரு பொழுதுபோக்கு என்பதெல்லாம் இல்லை. சமூக வலைதளங்களும் தற்போது ஒரு ஊடகத்தின் எதிரொலி தான். சமூக வலைதளங்கள் மூலம் எந்த செய்தியும் நொடிப்பொழுதில் எல்லாரிடமும் போய்ச் சேர்கிறது. 

அதேபோல் போலி செய்திகளும் எளிதில் மக்களிடத்தில் சென்றடைகிறது என்பது தான் பிரச்னை. இதனை தடுக்க அரசும், சமூக வலைதள நிறுவனங்களும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக்கொண்டுதான் உள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்தல் நேரத்தில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க சமூக வலைத்தளங்களை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து, தனது வலைத்தளம் மூலமாக பதிவிடப்படும் செய்திகளில் போலி செய்தியைக் கண்டறிந்து நீக்க பரிந்துரைக்க ஏற்கனவே சில நிறுவனங்களை ஃபேஸ்புக் பணியமர்த்தியது. இந்நிலையில் இந்தியா டுடே உள்ளிட்ட மேலும் 5 நிறுவனங்களை ஃபேஸ்புக் பணியமர்த்தியுள்ளது. 

செய்தி கட்டுரைகளின் உண்மைத்தன்மையை ஆராய்வது மட்டுமல்லாமல் பகிரப்படும் புகைப்படம், வீடியோக்களின் உண்மை தன்மையை ஆராயவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய செய்திகளுக்கான பேஸ்புக் இணைப்பு நிறுவன தலைவர், இந்தியாவில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் போலி செய்திகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 7 நிறுவனங்களை பணியமர்த்தியுள்ளோம். ஆறு மொழிகளின் கீழ் இந்த நிறுவனங்கள் போலி செய்திகளை கண்டறிந்து நீக்கும் என்று தெரிவித்தார்.

ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளின் கீழ் போலி செய்திகள் வடிகட்டப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலி செய்தியை கண்டறிய 5 நிறுவனங்களை பணியமர்த்திய ஃபேஸ்புக் போலி செய்தியை கண்டறிய 5 நிறுவனங்களை பணியமர்த்திய ஃபேஸ்புக் Reviewed by Vanni Express News on 2/12/2019 11:22:00 PM Rating: 5