மன்னார் தனியார் விற்பனை நிலையத்தில் தீ - பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலைய் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இரவு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்சாதனப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் வழமை போல் இரவு மூடப்பட்டுள்ளது. எனினும் இரவு 9 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்தினுள் திடீர் என தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அருகில் உள்ள வர்த்தகர்களும், மக்களும் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். 

மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததோடு, மக்களை குறித்த பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. எனினும் நீண்ட நேரமாகியும் தீயை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 

பின்னர் மன்னார் நகர சபையின் பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு தீயை கட்டுப்படுத்த முயன்றனர். குறித்த விற்பனை நிலையத்தின் கீழ் பகுதி மற்றும் மேல் மாடியிலும் தீ பரவியது. 

வவுனியா தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இரவு 10.30 மணியளவில் வவுனியாவில் இருந்து மன்னாருக்கு வருகை தந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

எனினும் நீண்ட நேரத்தின் பின் குறித்த தீ இரவு 11.45 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. 

குறித்த தீ பரவலின் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் உள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய மற்றும் பழைய மின் சாதனப்பொருட்கள் தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளது. 

குறித்த தீப்பரவல் தொடர்பில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

எனினும் குறித்த தீ பரவல் தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறித்த விற்பனை நிலையத்திற்கு கணக்காய்வுக்குழுவினர் வருகை தந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் பின்னரே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

மேலும் மன்னாரில் தீ அனைப்பு பிரிவு இருந்திருந்தால் குறித்த தீப்பரவலை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 
மன்னார் தனியார் விற்பனை நிலையத்தில் தீ - பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம் மன்னார் தனியார் விற்பனை நிலையத்தில் தீ - பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம் Reviewed by Vanni Express News on 2/13/2019 10:24:00 AM Rating: 5