போதை ஒழிப்பு ஜனாதிபதியின் திட்டத்துக்கு பூரண ஒத்துமைப்பு வழங்குவோம் - அமைச்சர் ஹலீம்

- எம்.எஸ்.எம்.ஸாகிர்

போதையில் இருந்து விடுபடும் நாடு எனும் இலக்கை நோக்கி ஜனாதிபதி மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருவதற்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய அமைச்சுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆலோசனை மற்றும் நல்லிணக்கத்துக்கான பேரவையுடன்(ஏ.ஆர்.சி) இணைந்து நடாத்திய 2020ஆம் ஆண்டுக்கான தேசிய பள்ளிவாசல் விருது விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வு (27) புதன்கிழமை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று எமது நாடு போதைப் பொருளுக்கு அடிமையாகி அல்லோலகல்லோப்பட்டுக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.  போதையில் இருந்து விடுபடும் நாடு எனும் இலக்கை நோக்கி ஜனாதிபதி மிகுந்த அக்கறையுடன்  அயராது செயற்பட்டு வருவதைக் காண்கின்றோம்.

நாட்டில் அண்மைக் காலங்களாக போதைப் பொருட்கள் தொடர்பான செய்திகள் அதிகரித்துச் செல்வது மிகுந்த கவலை அளிக்கின்றது. 

ஒரு சமூகம் என்ற வகையில் நாம் அனைவரும் ஜனாதிபதியோடு கைகோர்த்து நின்று, ஏற்படும் சவால்களை முறியடிக்க எம்மாலான சகல ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். எமது இளைஞர்களை இந்தப் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுக்க கல்வியலாளர்கள் விசேட வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும். பள்ளிவாசல்களை வெறும் தொழுகைக்காக மட்டும் பயன்படுத்தும் நிலையில் இருந்து விடுபட்டு அவற்றை சமூக மயப்படுத்த வேண்டும். சமூக அமைப்புக்கள் ஒன்று கூடும் இடமாக பள்ளிவாசல்களை மாற்றி, அங்கு சமூக சேவைகள், நல்லிணக்கம், போதைப் பொருட்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 எமது பள்ளிவாசல்களில் குத்பாப்பிரசங்கம் நடத்தும் போது, இளைஞர்களை வலியுறுத்தும் வகையில் குத்பாப் பிரசங்கங்களை நடத்த வேண்டும். பள்ளிவாசல் மட்டுமல்லாது பாடசாலைகளிலும் கூட போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர்களை காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சகல பள்ளிவாசல் நிருவாகத்தினரையும் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

இதன்போது ஆலோசனை மற்றும் நல்லிணக்கத்துக்கான பேரவையுடன்(ஏ.ஆர்.சி) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2020 சிறந்த மஸ்ஜித்களை தெரிவு செய்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, கொழும்பு பிரதி மேயர் எம்.ரி.எம்.இக்பால், முஸ்லிம் சமய கலாசாரப் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி), கலாசார உத்தியோகத்தர் எம்.எம்.எம். முப்தி, ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.பீ.டூல், ஆலோசனை மற்றும் நல்லிணக்கத்துக்கான பேரவையின் தலைவர் ஒஸ்மான் மற்றும் அதன் உறுப்பினர்கள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
போதை ஒழிப்பு ஜனாதிபதியின் திட்டத்துக்கு பூரண ஒத்துமைப்பு வழங்குவோம் - அமைச்சர் ஹலீம் போதை ஒழிப்பு ஜனாதிபதியின் திட்டத்துக்கு பூரண ஒத்துமைப்பு வழங்குவோம் - அமைச்சர் ஹலீம் Reviewed by Vanni Express News on 2/28/2019 11:18:00 PM Rating: 5