பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை

பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் முப்படை பாதுகாப்பினரும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. இதையடுத்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறின. அதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. 

இந்த பதில் தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இதனால் இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை உண்டாகியுள்ளது.

இத்தகைய சூழலில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தளபதி சுனில் லன்பா மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில் எல்லை நிலவரம், இந்திய படைகளின் தயார் நிலை, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், முப்படையினரும் கூட்டாக இன்று மாலை 5 மணிக்கு டெல்லி செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின் போது, எல்லை நிலவரங்கள், விமானி அபிநந்தனை மீட்பது உள்ளிட்டவை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படலாம் எனப்படுகிறது. 

இந்த செய்தியாளர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், செய்தியாளர் சந்திப்பின் போது மொபைல் போன்களுக்கும் அனுமதியில்லை என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை Reviewed by Vanni Express News on 2/28/2019 04:01:00 PM Rating: 5