இலக்கை நோக்கிய இன்றைய புத்தளம்

- ஏ.எம்.ஆயிஷா நிருபர்

புத்தளம் இலங்கையின் குப்பைத்தளமாகும் திட்டத்தை எதிர்த்து பெப்ரவரி 13,14,15 ஆகிய தினங்கள் கறுப்பு நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று புதன்கிழமை எதிர்ப்பு முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று அரச தனியார் அலுவலர்கள்,மாணவர்கள், ஊழியர்கள் போன்றோர் தங்கள் வேலை நிலையங்களுக்கும் பாடசாலைகளுக்கும் கறுப்பு பட்டிகளை அணிந்தவர்களாக சென்றமை மக்களது எதிர்ப்பை சிறப்பாக படம்பிடித்து காட்டுகின்றது.

மேலும் சிறுவர் முன்பள்ளிகள் தங்கள் மழலைச் செல்வங்களை கருமை ஆடைகளுடனும் கறுப்பு தலைப்பட்டிகள்,கைப்பட்டிகள் என்பவற்றுடனும் வீதியில் போராடியமை நாளைய சந்ததிக்காய் துடிக்கும் உதிரங்களின் உழைப்பினை பிரதிப்பலிக்கின்றது.

இளைஞசர்களினதும் போராளிகளினதும் கடின முயற்சியாலும் சர்வமத ஒன்றிணைப்பாலும் கடந்த சில தினங்களாக ஏற்பாடுகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டன. நேற்று நேரம் காலம் பாராமல் வேலைப்பழுக்களை பொருட்படுத்தாமல் அனைத்து ஆண் குடிமகன்களும் ஒன்றிணைந்து இரவு இரவாக கறுப்பு கொடிகளை வீடுகளிலும் ஊர் பொது இடங்களிலும் ஏற்றியதோடு பெனர்கள், சலாகைகள் போன்றவற்றை நகர் பூராகவும் கட்டினார்கள்.மேலும் வாகனங்களும் கறுமைக் கொடிகளை ஏந்தியவைகளாகவே பயணிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக போராட்டங்களாலும் மகஜர் கையளிப்புகளாலும் ரயில் மரியல்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் தங்கள் எதிர்ப்பையும் கவலையையும் காட்டிய மக்கள் நிராகரிப்புகளில் சளைக்காமல் மீண்டும் திரண்டு எழுந்தமை அத்திட்டத்தில் அம்மக்களின் அதிருப்தியை வெளிச்சமிட்டு காட்டுகின்றது.இன்றவர்கள் இறுதி துருப்பை இறுகப்பிடித்திருக்கும் முதல் நாளாகும்.இன்றைய வெற்றி நாளைய இரு தினங்களுக்கும் ஒரு மாதிரி என்பது திட்டமான உண்மையாகும்.
இலக்கை நோக்கிய இன்றைய புத்தளம் இலக்கை நோக்கிய இன்றைய புத்தளம் Reviewed by Vanni Express News on 2/13/2019 06:19:00 PM Rating: 5