தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடையே திட்டமிட்டே பிரச்சினை உருவாக்கப்படுகிறது - கல்முனை முதல்வர் றகீப்

-அஸ்லம் எஸ்.மௌலானா

ஒரே மொழியைப் பேசுகின்ற தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடையே பிரச்சினை வருகிறது என்றால் அது திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இன்றைய சூழ்நிலையில் கல்வி ஒன்றேதான் சமூக மாற்றத்திற்கான ஆயுதமாகும். அதன் மூலமே தாய் நாட்டுக்கும் சமூகத்திற்கும் எம்மால் பங்காற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையின் கல்முனை கிளைக் கல்லூரி திறப்பு விழா அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜுபிர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவற்றைக் குறிப்பிட்டார்.

ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் அதற்காக சர்வதேச பாடசாலைகள் ஆற்றி வருகின்ற பங்களிப்பு தொடர்பிலும் தனதுரையில் எடுத்துரைத்த முதல்வர் றகீப் மேலும் தெரிவிக்கையில்;

"நாங்கள் சிறுவர்களாக இருந்த காலப்பகுதியில் இப்பகுதியில் ஆங்கில மொழி மூலமான முன் பள்ளிகளோ சர்வதேச பாடசாலைகளோ இருக்கவில்லை. அதனால் எமக்கு ஆங்கிலத்தில் கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பல்கலைக்கழக அனுமதி கிடைத்த பின்னரே கொழும்பு சென்று அக்கியூனாஸில் ஆங்கில புலமைக்கான ஒரு வருட பாட நெறியை இரண்டு வருடங்கள் கற்றேன். சிறு பராயத்தில் எமக்கு ஆங்கிலக் கல்வி கிடைத்திருக்குமாயின் நாம் இன்னும் உயர்ந்த நிலைக்கு சென்றிருக்க முடியும்.

அதனால் தற்போது எமது காலடிக்கு வந்திருக்கின்ற சர்வதேச பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வியை தமது பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு பெற்றோர்கள் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அதேவேளை சர்வதேச பாடசாலைகளில் கற்கின்ற வாய்ப்பு வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. பொருளாதார வசதியுள்ள அல்லது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கே அந்த வாய்ப்பு இருக்கிறது. எமது எதிர்பார்ப்பு யாதெனில் கீழ்மட்ட பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி மூலமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதாகும். அதற்கு புலமைப்பரிசில் ரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலாவது சர்வதேச பாடசாலைகள் உதவ முன்வர வேண்டும். அதற்காக நீங்கள் ஒரு பங்கை ஒதுக்கீடு செய்து கொள்ள வேண்டும். இந்த பங்களிப்பானது வறிய மக்களுக்கு நீங்கள் செய்கின்ற பெரும் சேவையாக அமையும் என்பதுடன் அது நிலையான தர்மமாக அமையும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.    

கல்வியில் எமது சமூகம் முன்னேறி வருகிறது. எங்களது மருதமுனையின் பொருளாதார வளமாக கல்வியே இன்று முன்னிலை வகிக்கிறது. அங்கு கல்வியியலாளர்களிடையே அடுத்த நிலைக்குப் போவதற்கான பலத்த போட்டி நிலவுகிறது. அதன் மூலம் எமது தாய் நாட்டுக்கும் சமூகத்திற்கும் எவ்வாறு பங்காற்றலாம் என்று சிந்திக்கின்றனர். நாம் எங்கு சென்றாலும் அங்கு எம்மவர்கள் இருப்பது எமக்கு பெருமையாகவும் உதவியாகவும் இருக்கிறது.  

இலங்கையில் ஒவ்வொரு பிள்ளைக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவது அடைப்படை உரிமையாக இருக்கிறது. ஆசியாக் கண்டத்தில் ஜப்பானுக்கு அடுத்ததாக எழுத, வாசிக்கத் தெரிந்த மக்கள் கூடிய வீதத்தில் இருக்கின்ற நாடாக எமது இலங்கை காணப்படுகிறது. எமது நாடு கடன் பழுவுக்கு மத்தியிலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றது. அந்த வகையில் நாம் அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும். தாய் நாட்டுக்கு கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அதேவேளை இன்று எமது நாட்டில் இனங்களிடையே சௌஜன்யம், புரிந்துணர்வு இருக்கிறது என்று யாராவது சொன்னால் அது முற்றிலும் பொய்யான கருத்தாகும். முகத்திற்கு நேராக சிரித்து பேசினாலும் முகத்திற்குப் பின்னால் விரோதமாக நடக்கின்றனர். அடுத்தடுத்த சந்ததியினரும் அவ்வாறே உணர்வூட்டப்படுகின்றனர்.

மொழிப்பிரச்சினையில் தொடங்கிய சிங்கள, தமிழ் முரண்பாடு ஆயுதப்போர் வரை சென்றது. ஆனால் ஒரே மொழியைப் பேசுகின்ற தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடையே என்ன பிரச்சினை? அவ்வாறு பிரச்சினை வருகிறது என்றால் அது திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது என்பதையும் அதற்கான காரணமா என்ன என்பதையும் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எமது அடுத்த சந்ததியினராவது பரஸ்பரம் புரிந்துணர்வுடன் ஐக்கியமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி, ஒழுக்கமும் சகிப்புத்தன்மையும் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான முன்பள்ளிகள் அத்திவாரமாக அமைதல் வேண்டும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் மூலோபாய அபிவிருத்தி, வெளிநாட்டு வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை தமிழ் உப பிரதேச செயலாளர் எம்.அதிசயராஜா, தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர், எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையின் தவிசாளர் எஸ்.சிறிவைகூந்தன் உள்ளிட்டோர் விசேட அதிதிகளாக பங்கேற்றிருந்தனர். அத்துடன் சமயப் பெரியார்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினர்.

நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜுபிர் அவர்களினால் முதல்வர் உட்பட அதிதிகள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடையே திட்டமிட்டே பிரச்சினை உருவாக்கப்படுகிறது - கல்முனை முதல்வர் றகீப் தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடையே திட்டமிட்டே பிரச்சினை உருவாக்கப்படுகிறது - கல்முனை முதல்வர் றகீப் Reviewed by Vanni Express News on 2/05/2019 05:57:00 PM Rating: 5