பால்மா விவகாரம் - உண்மைகளை கண்டறிய உத்தரவு

- ஊடகப்பிரிவு

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றிம் வர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் புத்திக பத்திரன ஆகியோர் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவு பிரப்பித்துள்ளார். 

கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரன இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால் இது தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையைக் கோரியுள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம் பெளசரைத் தொடர்பு கொண்டு வினவிய போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்; 

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படம் உள்ளதாக நுகர்வோர் அதிகார சபைக்கு இதுவரை முறைப்பாடுகளை கிடைக்கவில்லை. இவ்வாறு கலப்படங்கள் செய்யப்பட்ட பால்மா இறக்குமதி செய்யப்படுவதாக செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்ததையடுத்தே அறிந்துகொண்டோம். இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் கலப்படம் இருப்பதாக முறைப்பாடுகள் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்தும்,  அமைச்சரும் பிரதியமைச்சரும் வேண்டிக்கொண்டதனையடுத்தும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளை ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டு ஆய்வு கூடங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளோம். தேசிய ரீதியில் உள்ள ஆய்வு கூடங்களில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாமையினாலேயே சர்வதேச ஆய்வு கூடங்களை நாடவேண்டியுள்ளது. 

நாங்கள் தேசிய ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் உள்ளூர் ஆய்வுகூடங்கள் நவீன தொழிநுட்ப வசதிகள் இல்லை எனத் தெரிவித்தன. சர்வதேச ஆய்வு கூடத்தில் பால்மா வகைகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கலப்படங்கள் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட பால்மா நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் . மனித பாவனைக்குதவாத பால்மா வகை என்றால் தடைசெய்யப்படும். கிடைக்கப்பெறும் சர்வதேச ஆய்வுகூட அறிக்கை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
பால்மா விவகாரம் - உண்மைகளை கண்டறிய உத்தரவு பால்மா விவகாரம் - உண்மைகளை கண்டறிய உத்தரவு Reviewed by Vanni Express News on 2/07/2019 04:27:00 PM Rating: 5