கொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 

10-ம் வகுப்பு மாணவியான இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திடீரென மாயமானார். அன்று காலையில் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்ற சரிதா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த சுப்பிரமணி உறவினர்களுடன் சேர்ந்து சரிதாவை பல இடங்களில் தேடி பார்த்தனர். 

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து சுப்பிரமணி, மகள் சரிதா காணாமல் போனது பற்றி பொதட்டூர்பேட்டை பொலிஸில் முறைப்பாடு செய்தார். 

பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மாணவி சரிதாவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பின்னர் சரிதா மாயமான வழக்கை பொலிஸார் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். 

இந்த நிலையில் அதே பகுதியில் கீச்சளம் என்கிற கிராமத்தில் கரும்பு தோட்டத்தை ஒட்டியுள்ள கால்வாய் பகுதியில் இளம்பெண்ணின் எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. தலைமுடி பள்ளிச் சீருடை ஆகியவையும் சிதறி கிடந்தன. 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பொலிஸுக்கு தகவல் தெரிவித்தனர். பொதட்டூர்பேட்டை பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். எலும்புக்கூட்டை கைப்பற்றி திருத்தணி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

தலைமுடி, சீருடை உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர். பொலிஸார் நடத்திய விசாரணையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாயமான மாணவி சரிதா கொன்று புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

மாணவி சரிதா கொலை செய்யப்பட்டது ஏன்? அவரை கொலை செய்தது யார்? என்பது தெரியவில்லை. மாணவி சரிதா அணிந்திருந்த பள்ளி சீருடை தனியாக ஒரு பையில் சுற்றி வீசப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கும் போது, மாணவி நிர்வாணமாக புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

எனவே அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கருதுகிறார்கள். இருப்பினும் எலும்புக் கூட்டை பரிசோதனை செய்தால்தான் மாணவி எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 

மாணவி கொலை செய்யப்பட்டது பற்றி கேள்விப்பட்டதும், திருவள்ளூர் மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு பொன்னி நேரில் சென்று விசாரணை நடத்தினார். 

மாணவி சரிதாவை கொலை செய்த குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி கொன்று புதைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடசாலை மாணவி Reviewed by Vanni Express News on 2/12/2019 03:16:00 PM Rating: 5