மலையக மக்கள் முகத்தில் புன்னகையை காண இந்திய அரசு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றது

- க.கிஷாந்தன்

மலையக மக்கள் முகத்தில் புன்னகையை காண இந்திய அரசு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றது - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து தெரிவிப்பு

கடன் அல்லாது முற்றிலும் மானிய உதவியுடன் வெளிநாடுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள செயல்திட்டங்களில் மிக பெரிய அபிவிருத்தி திட்டம் இலங்கையில் செய்யப்பட்டு வருகின்றது.

இந்தியா இலங்கைக்கு உறவுகளை கொண்ட அண்டிய நாடாகும். இந்தியா இலங்கையில் அமைகின்ற மொத்த வீடுகள் கிட்டதட்ட 63,000 ஆகும். இதற்கென 350 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் அல்லது 5000 கோடி இலங்கை ரூபாய் மானிய உதவியுடன் இவ்வீடுகள் கட்டப்படுகின்றன. இவற்றுள் 47,000 வீடுகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனிவீடுகள் அடங்கிய “வீ.கே.வெள்ளையன் புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் 24.02.2019 அன்று இடம்பெற்றது.

இதற்கு சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அழகிய மலை பிரதேசத்திற்கு மீண்டும் வருகை தந்து இந்த இனிய விழாவிலும் பங்கேற்பதை மகிழ்ச்சியடைகின்றேன். 2017ம் ஆண்டு மே மாதம் பாரத பிரதமர் மோடி நோர்வூட் மைதானத்திற்கு வந்த போது அவருக்கு அளித்த வரவேற்பு இன்னும் எனது மனதில் பசுமையாக தங்கியிருக்கின்றது. இன்றைய தினம் அமரர். வீ.கெ.வெள்ளையன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள 155 வீடுகளை கொண்ட புதிய கிராமம் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த திட்டத்தின் செயல்பாட்டை திரும்பி பார்க்கின்ற பொழுது ஒரு சிறந்த பயணமாக இருக்கின்றது. சென்ற ஆண்டு ஆகாஸ்ட் மாதம் முதன் முதலில் இந்திய வீட்டு திட்டத்தின் மூலம் டன்சினன் வீட்டு திட்டம் கையளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணிலும் பங்கேற்றினார். பாராத பிரதமர் மோடியும் காணோளி மூலம் உரையாற்றினார். சென்ற மாதம் டயகம மேற்கு தோட்டத்தில் 150 வீடுகள் கையளிக்கப்பட்டன. இன்றைய தினம் அன்றைய நிகழ்வின் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகின்றது. நீங்கள் அணைவரும் தனி வீடுகள் ஊடாக காணிகளுக்கும் சொந்தகாரர்களாகியின்றனர்.

எல்பொட, லெஜர்வத்தை உள்ளிட்ட மேலும் பல தோட்டங்களில் இந்திய வீடுகள் கட்டப்பட்டு விரைவில் கையளிக்கப்படவுள்ளன. இன்று இந்திய வீட்டு திட்டம் அல்லாது மாதிரி கிராமங்கள் திட்டம் ஊடாக 1200 வீடுகள் தென் மாகாணத்திலும் கட்டப்படுகின்றன.

எமது இரு நாட்டிற்கும் இடையே உள்ள முக்கிய உறவு பாலமாக மலையக மக்களாகிய நீங்கள் இருக்கின்றீர்கள். எத்தகைய சோதனை ஒன்றிலும் மன தைரியத்துடன் நீங்கள் இருப்பதை நாங்கள் காண்கின்றோம்.

இன்று இலங்கை தேயிலை உலக புகழ் பெற்றதாக விளங்குகின்றது என்றால் அதற்கு உங்களுடைய பங்களிப்பே காரணமாகும். இலங்கை அரசாங்கம் உங்கள் விலை மதிக்க முடியாத பங்களிப்புக்கு அங்கீகாரத்தை அளிக்கின்றது. இதை நாம் திடமாக நம்புகின்றோம்.

நம்மிடையேயான தொடர்பு இன்று நேற்று நடந்தது அல்ல. நீங்கள் அறிவீர்கள் 1923ம் ஆண்டு கொழும்பில் இந்திய தூதரகம் அமைப்பதற்கு முன்பே கண்டியில் இணை தூதரகம் அமைக்கப்பட்டது. இது உங்களின் முன்னோர்கள் பயன்பெறுவதற்காகவே செயல்படுத்தப்பட்டது.

1947ம் ஆண்டு சிவட் எனப்படுகின்ற தோட்ட தொழிலாளர்கள் கற்கை கல்வி நிலையத்தையும், மலையக மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. நம்முடைய பந்தம் காலம் காலமாக வளர்ந்தே வந்துள்ளது.

டிக்கோயாவில் ஆதார வைத்தியசாலை உங்களுக்காக வழங்கியுள்ளோம். கண்டி மற்றும் பண்டாரவளையில் ஆங்கில கல்வி பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா எல்பொட, அட்டன் உள்ளிட்ட பகுதிகளில் தொழில் பயிற்சி கூடங்கள் தோட்ட பாடசாலைகளில் அறிவியல் ஆய்வு கூடங்கள், பெருந்தோட்ட குழந்தை காப்பாகங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

1990 இலவச அம்புலன்ஸ் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட தோட்டப்பகுதிகளில் அண்மையில் விரிவுப்படுத்தப்பட்டது. புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் புதிய கட்டிடமும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 

இலங்கையில் பல்கலைகழகங்களிலேயே உள்ள மிக பெரிய அரங்கத்தை மாத்தறையில் உள்ள ருகுணு பல்கலைகழகத்தில் கடந்த வருடம் இந்திய நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது.

உங்கள் ஒவ்வொருவுடைய முகத்திலும் புன்னகையை காண வேண்டும் என இந்தியா விரும்புகின்றது. இதன் முயற்சியாகவே நாம் இலங்கை முழுவதும் பல்வேறு மக்கள் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

70 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலன் சார்ந்த இத்தகைய திட்டங்களை செய்து வருகின்ற அதேவேளை 20 வீதத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதையெல்லாம் மானிய முறையில் இந்திய மக்களால் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் எல்லோரும் புதிய வீடுகளிலேயே மகா சிவராத்திரி பண்டிகையை கொண்டாடுவீர்கள்.

இந்திய உயர்ஸ்தானிகராக ஒவ்வொரு முறையும் உங்களை சந்திக்கும் போது மிகவும் மனம் நெகிழ்கின்றேன். நானும் உங்களை போல மலை பகுதியில் பிறந்தவன் என்பதால் அதை பிரத்யேகமாக உணர்கின்றேன். கடவுள் எல்லோரையும் ஆசீர் வதிப்பராக என அவர் மேலும் தெரிவித்தார்.
மலையக மக்கள் முகத்தில் புன்னகையை காண இந்திய அரசு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றது மலையக மக்கள் முகத்தில் புன்னகையை காண இந்திய அரசு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றது Reviewed by Vanni Express News on 2/24/2019 11:53:00 PM Rating: 5