இந்தியா பாகிஸ்தான் சூழல் கவலை அளிக்கிறது - பிரிட்டன் பிரதமர் தெரேசா

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதட்டமான சூழல் கவலை அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பின் பெயரை குறிப்பிட்டு ஒருமனதாக கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியது. இந்திய விமானப்படையின் ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் மூலம் நேன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தற்போது நிலவும் சூழல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தெரேசா மெ, “இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதட்டமான சூழல் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அத்துடன் இரு நாடுகளும் இந்த விவகாரத்தை பொறுமையாக கையாளவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் பீல்டு, “பிரிட்டன் அரசு புல்வாமா தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை தூதரக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் சூழல் கவலை அளிக்கிறது - பிரிட்டன் பிரதமர் தெரேசா இந்தியா பாகிஸ்தான் சூழல் கவலை அளிக்கிறது - பிரிட்டன் பிரதமர் தெரேசா Reviewed by Vanni Express News on 2/27/2019 11:31:00 PM Rating: 5